Published : 24 Apr 2023 03:10 PM
Last Updated : 24 Apr 2023 03:10 PM

பூஞ்ச் பயங்கரவாத தாக்குதல்: 40-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை - தேடுதல் வேட்டை தீவிரம்

பூஞ்ச்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 40-க்கும் மேற்பட்டோரை தடுப்புக்காவலில் கைது செய்து அவர்களிடம் பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியான பிம்பர் காலி என்ற இடத்தில் இருந்து சங்கியோடி என்ற இடத்துக்கு ராணுவ வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 6 ராணுவ வீரர்களை குறிவைத்து அப்பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கடந்த 20-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராக்கெட் மூலம் வீசக்கூடிய எரிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலை லஷ்கர் இ தொய்பா எனும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு நடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் 40-க்கும் மேற்பட்டோரை பிடித்துள்ள பாதுகாப்புப் படையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காக ஜம்மு காஷ்மீருக்கு கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளைப் பிடிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ராணுவத்தின் வடக்கு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புப் படை, தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

தாக்குதலின் பின்னணி: ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, அதன் ஒரு மாநாட்டை ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அடுத்த மாதம் நடத்த உள்ளது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீநகரில் நடக்க உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என பாகிஸ்தான் அரசு சீனாவை கேட்டுக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீநகரில் ஜி20 மாநாடு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த தாக்குதலின் மூலம், மாநாட்டில் பங்கேற்க உள்ளவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதன்மூலம் ஸ்ரீநகருக்கு பதில் வேறு எங்காவது மாநாட்டை நடத்துவதற்கான அழுத்தத்தை இந்திய அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருக்கலாம் என ரகசியத் தகவல்களை மேற்கோள்காட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x