Published : 24 Apr 2023 11:59 AM
Last Updated : 24 Apr 2023 11:59 AM

தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க முயன்றால் கடும் நடவடிக்கை: சரத் பவார்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க முயல்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ளது. இதில், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், பாஜகவோடு கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறார்.

தற்போதைய ஆளும் கூட்டணியான பாஜக - சிவசேனா கூட்டணியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. மகாராஷ்டிர துணை சபாநாயகர் கடந்த ஆண்டு இவர்கள் 16 பேரையும் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்குமானால் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சியை தொடருவதில் சிக்கல் ஏற்படும். இதை பயன்படுத்தி, பாஜக கூட்டணியில் இணைய அஜித் பவார் திட்டமிட்டு வருகிறார். அதேநேரத்தில், முதல்வர் பதவியையும் அவர் குறிவைத்து வருகிறார்.

தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களில் கணிசமானவர்களின் ஆதரவு அஜித் பவாருக்கு இருப்பதால், அவர் கட்சியை உடைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இது குறித்து நேற்று பதில் அளித்த சரத் பாவர், ''கட்சியை உடைக்க நாளை யாரேனும் திட்டமிட்டால் அது அவர்களின் வியூகம். ஆனால், அதன் பிறகு நாங்கள் எடுக்கும் முடிவு கடுமையானதாக இருக்கும்'' என எச்சரித்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவாரிடம், வரும் 2024-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிடுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சரத் பவார், ''நாங்கள் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருக்கிறோம். இணைந்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், விருப்பம் மட்டுமே போதுமானதாக இருக்க முடியாது. தொகுதி பங்கீடு, வேறு பிரச்சினைகள் என பல இருக்கின்றன. இன்னும் அவை குறித்து விவாதிக்கவே இல்லை. எனவே, இதுபற்றி நான் என்ன கூற முடியும்?'' என தெரிவித்தார்.

இந்நிலையில், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவு செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், ''மகா விகாஸ் கூட்டணி தொடரும். மாபெரும் தலைவர்களான உத்தவ் தாக்கரேவும், சரத் பவாரும் இருக்கிறார்கள். எனவே, வரும் 2024 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் இணைந்தே தேர்தலை எதிர்கொள்வோம்'' என்று தெரிவித்தார்.

தற்போது மகா விகாஸ் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே, ''சொந்த மக்களால் கைவிடப்பட்டவர்கள் உண்மையில் மகா விகாஸ் அகாதியை வழிநடத்த முடியுமா என்பதை சரத் பவார் விரைவில் அறிந்து கொள்வார். மகா விகாஸ் அகாதி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் அதன் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x