Published : 24 Apr 2023 05:15 AM
Last Updated : 24 Apr 2023 05:15 AM

கேதார்நாத் பக்தர்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் இறக்கையில் அடிபட்டு அதிகாரி உயிரிழப்பு

டேராடூன்: கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் இறக்கையில் அடிபட்டு ஹெலிகாப் டர் நிறுவன அதிகாரி உயிரிழந்தார்.

உத்தராகண்ட் அரசுக்கு சொந்தமான கார்வால் மண்டல விகாஸ்நிகாம் நிறுவனம், கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிபேடில், நேற்று மதியம் சுமார் 2 மணிக்கு போக்குவரத்து ஏற்பாடுகளை அதிகாரி ஜிதேந்திர குமார் சைனி ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது ஹெலிகாப்டரின் இறக்கை மோதியதில் அடிபட்டு அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவலை ருத்ரபிரயாக் காவல் கண்காணிப்பாளர் விசாகா அசோக் தெரிவித்தார்,

சார் தாம் யாத்திரை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் அடுத்த நாளே இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்தராகண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோயில்களுக்கும் பக்தர்கள் மேற்கொள்ளும் புனிதப் பயணம், சார்தாம் யாத்திரை என்றழைக்கப்படுகிறது.

முன்பதிவு: குளிர்காலத்தில் மூடப்பட்டிருக்கும் இந்த கோயில்கள் கோடை காலத்தில் திறக்கப்படும்.இந்தக் கோயில்களுக்கு செல்ல,குறிப்பிட்ட சில இடங்களில் நேரடியாகவும் இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில், அட்சய திருதியை முன்னிட்டு கங்கோத்ரிமற்றும் யமுனோத்ரி ஆகிய கோயில்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக நேற்று முன்தினம் மதியம் திட்டமிட்டபடி திறக்கப்பட்டன. இதுபோல, இந்த 2 கோயில்களுக்கு யாத்திரை செல்வதற்கான முன் பதிவும் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதுபோல கேதார்நாத் கோயில் யாத்திரைக்கான முன்பதிவு வரும் 25-ம் தேதியும் பத்ரிநாத் கோயில் யாத்திரைக்கான முன்பதிவு 27-ம்தேதியும் தொடங்க திட்டமிடப்பட் டிருந்தது. இந்நிலையில், கேதார்நாத் முன்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சார்தாம் யாத்திரை நிர்வாக அமைப்பின் கூடுதல் தலைமைச் செயல் அதிகாரி நரேந்திர சிங் கவிரியால் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் யாத்திரைக்காக ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில் மேற்கொள்ளப்படும் முன்பதிவு வரும் 30-ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வானிலை நிலவரத்தை கருத்தில் கொண்டும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டும் உரிய முடிவு எடுக்கப்படும்” என்றார். இதுவரை சுமார் 16 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என உத்தராகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x