Published : 24 Apr 2023 05:11 AM
Last Updated : 24 Apr 2023 05:11 AM
பெங்களூரு: பெங்களூரு அருகே மழையில் நனைந்த பிரதமர் நரேந்திர மோடியின் கட் அவுட்டை முதியவர் ஒருவர் தனது துண்டால் மழை நீரை துடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் பெங்களூருவை அடுத்துள்ள தேவனஹள்ளியில் நடைபெற இருந்தது. திடீர் மழை காரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்நிலையில், அங்கு சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் கட் அவுட் மழையில் நனைந்து கிடந்தன.
இதைப் பார்த்த முதியவர் மோடியின் கட் அவுட்டில் இருந்த மழை நீரை தனது துண்டால் துடைத்து நிற்க வைத்தார். இதேபோல ஆங்காங்கே விழுந்து கிடந்த கட் அவுட்களையும் துடைத்து, ஒழுங்கு செய்தார்.
மோடி கடவுள் மாதிரி: இதைப் பார்த்த சிலர் அந்த முதியவரிடம், ‘‘பாஜகவினர் இதற்கு பணம் கொடுத்தார்களா?'' என கேட்டனர். அதற்கு அவர், ‘‘மோடி எனக்கு கடவுள் மாதிரி. அவருக்கு எனது விசுவாசத்தை காட்டுகிறேன். இதற்காக யாரும் பணம் தர வேண்டியதில்லை'' என்றார்.
சமூக வலைதளங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்த இந்த வீடியோவை ஏராளமானோர் பகிர்ந்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘‘இந்நாட்டின் தலைவர்கள் மீது மக்கள் அளவற்ற அன்பு காட்டுவதை இதற்கு முன் கண்டதில்லை. பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் அளவில்லாத பாசத்தை காட்டுகின்றனர்.
அவர் மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர் மீதான உண்மையான அன்பை பாஜக பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடகாவில் உள்ள தேவனஹள்ளியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ அதனையே உணர்த்துகிறது'' என கன்னட மொழியில் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT