Published : 23 Apr 2023 03:50 PM
Last Updated : 23 Apr 2023 03:50 PM
அமிர்தசரஸ்: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்ட நிலையில் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாபின் மோகா பகுதியில் இன்று (ஏப்ரல் 23) காலை கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பஞ்சாப் மாநில முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், "35 நாட்களுக்குப் பின்னர் இன்று அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள், சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்பாவிகளைத் தொந்தரவு செய்யமாட்டோம். ஏனெனில் நாங்கள் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதில்லை. அம்ரித்பால் கைது செய்யப்படுவதை வரை அமைதி காத்த மூன்றரை கோடி பஞ்சாப் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
யார் இந்த அம்ரித்பால் சிங்: சீக்கியர்களுக்கு என தனி நாடு தேவை என்பது காலிஸ்தான் அமைப்பின் பிரதான கோரிக்கையாக உள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்'என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார். அவரை கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். அவர் நேபாளத்துக்கு தப்பிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அவர் ஆடியோ, வீடியோ என்று வெளியிட்டு போலீஸுக்கு சவால்விடுத்து வந்தார்.
இந்நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 1984ம் ஆண்டு இந்திரா காந்திக்கு நேர்ந்தது போல, மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கும் நிகழும் என மிரட்டல் விடுத்ததால் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
பாகிஸ்தான் தொடர்பு: அம்ரித்பால் சிங்குக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் மூலம் ஆயுதங்களைப் பெற்று பஞ்சாபில் இளைஞர்களை துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு தூண்டுவதாகவும் மத்திய புலனாய்வு அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அம்ரித்பால் சிங் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT