Published : 23 Apr 2023 06:59 AM
Last Updated : 23 Apr 2023 06:59 AM
சென்னை: அடுத்த சில மாதங்களில் ஆதித்யா எல்-1, சந்திரயான்-3 உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் ஏவுதல் திட்டம் வெற்றியடைந்த பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சி-55 ராக்கெட் திட்டம் பிஎஸ்எல்வி-யின் 57-வது பயணமாகும். இதன் வெற்றி, பிஎஸ்எல்வி வணிகப் பணிகளுக்கு ஏற்ற, நம்பகமான ராக்கெட் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. பிஎஸ்எல்வி ராக்கெட் வடிவமைப்பில், நேரம், செலவைக் குறைக்க பல்வேறு யுத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதற்காகப் பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த சில மாதங்களில் ஆதித்யா எல்-1, சந்திரயான்-3, ககன்யான் சோதனை ஓட்டம் என பல்வேறு முக்கியத் திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
சர்வதேச அளவில் அதிக செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய வெற்றிகரமான ராக்கெட் என்ற பெருமையை பிஎஸ்எல்வி பெற்றுள்ளது. எனவே, வர்த்தக ரீதியில் ராக்கெட்களை ஏவும் பணிகள் அதிகரிக்கப்படும். மேலும், எதிர்காலத் தேவைக்கேற்ப புதிய ராக்கெட் உருவாக்கத்துக்கான ஆராய்ச்சிகளிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் விண்வெளித் துறையில், தனியார் நிறுவனங்களும் இணைந்து பங்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் 200-க்கும்மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், விண்வெளித் துறையில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. குறிப்பாக, 5 பெரிய நிறுவனங்கள் மூலம் ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
ஜிசாட்-12 செயற்கைக்கோள்
‘‘இந்தியாவின் தகவல் தொடர்பு சேவைக்காக ஜிசாட்-12 செயற்கைக்கோள் 2011-ம் ஆண்டு ஜூலை15-ம் தேதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் ஆய்வுக்காலம் சமீபத்தில் முடிவுற்றது. இதையடுத்து, அந்த செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை படிப்படியாக மாற்றப்பட்டு, விண்வெளியில் பயன்பாடற்ற பகுதிக்குத் தள்ளி விடப்பட்டுள்ளது’’ என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT