Published : 22 Apr 2023 05:35 PM
Last Updated : 22 Apr 2023 05:35 PM
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து காங்கிரஸுக்குச் சென்றதால், பாஜகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அதன் விவரம்: ''கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பல்வேறு காரணங்களின் அடிப்படையிலேயே கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. பாஜக எப்போதுமே மாற்றத்தின் மீது நம்பிக்கை கொண்ட கட்சி.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், அதற்குக் காரணமாக தலைவர்கள் சிலரை குறைகூறுகிறார்கள். தேர்தலில் யாரை நிறுத்த வேண்டும் என்ற முடிவை எடுத்த தலைவர்கள் யாரும் கரைபடிந்தவர்கள் அல்ல. அவர்கள் பொறுப்புள்ள கட்சித் தலைவர்கள். சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து நாங்களும் அவர்களிடம் கேட்டோம்.
ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சிக்கு சென்றுவிட்டதால், இந்தத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட முடியும் என காங்கிரஸ் கட்சி கருத வேண்டாம். அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். ஜெகதீஷ் ஷெட்டர்தான் சென்றுள்ளார். அவரோடு எங்களின் வாக்கு வங்கியோ, தொண்டர்களோ செல்லவில்லை. குறைந்தபட்சம் இந்த உண்மையையாவது காங்கிரஸ் ஒப்புக்கொள்ளும் என நம்புகிறேன்.
பஞ்சாபில் காலிஸ்தான் அலை வீசவில்லை. தப்பியோடிய அம்ரித்பால் சிங்கை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மாநில அரசு தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது. மாநில அரசுக்கு மத்திய அரசு உதவுகிறது. நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இந்தியாவின் ஒற்றுமை மீதும், இறையாண்மை மீதும் யாரும் தாக்குதல் நடத்த முடியாது. இதற்கு முன் அம்ரித் பால் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்தார். ஆனால், தற்போது அவ்வாறு சுற்ற முடியாது; முன்புபோல் செயல்பட முடியாது'' என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT