Published : 22 Apr 2023 04:48 PM
Last Updated : 22 Apr 2023 04:48 PM

“ஊழலால் கர்நாடக மாநில வளர்ச்சியில் பின்னடைவு” - நீதிபதி பி.எஸ்.பாட்டீல் கருத்து

லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல் | கோப்புப் படம்

பெங்களூரு: ஊழல் புற்றுநோய்க்கு நிகரானது. நிர்வாகத் திறனை அரித்துவிடும் என்று லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல் தெரிவித்துள்ளார். ஊழல் காரணமாக கர்நாடக மாநிலம் அது அடைந்திருக்க வேண்டிய வளர்ச்சியை அடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நடந்த ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசியது: “புற்றுநோய்க்கு நிகரானது ஊழல். நிர்வாகத் திறனை அரித்துவிடும். ஊழல் காரணமாகவே கர்நாடக மாநிலம், அது அடைந்திருக்க வேண்டிய வளர்ச்சியை அடையவில்லை. கர்நாடகாவில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே இதேநிலைதான் நீடிக்கிறது. ஊழல் மலிந்துவிட்டதால நேர்மையான அதிகாரிகள் மனம் நொந்து போயுள்ளனர். உண்மையில் ஊழல் ஒழிப்பை அமைப்பு ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அரசு அமைப்புகளில் ஊழலைக் களைவதை கையில் எடுக்க வேண்டும்.

அரசு அலுவலகங்கள், அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை லோக் ஆயுக்தா நீதிமன்றமே நிறைய முறை தாமாக முன்வந்து விசாரணைகளை நடத்தியுள்ளது. அரசு ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் பாஜக எம்எல்ஏ மடல் விருபக்‌ஷப்பா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். அவருக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால், அவர் விடுதலையானபோது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிக மோசமான முன்னுதாரணம். இதுதான் ஊழலை ஊக்குவிக்கும்.

நீதிமன்றங்கள் தன் கடமையைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன. நாங்கள் மக்களுக்காக காலநேரம் பார்க்காமல் பணியாற்றத் தயாராக இருக்கிறோம். நீதியை நிலைநாட்ட நானும் எனது ஊழியர்களும் நிறைய தருணங்களில் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றியுள்ளோம். எனவே, ஓர் அரசு அதிகாரி வேலையில் காட்டும் அலட்சியம், கடமையைச் செய்வதில் காலம் தாழ்த்துதல், வேறேதும் ஆதாயம் எதிர்பார்த்தல், மருத்துவமனைகளின் அவலம் என எதுவாக இருந்தாலும் மக்கள் அதைப் பற்றி புகார் கூற முன்வர வேண்டும்.

மருத்துவமனையின் அவலங்கள் குறித்த புகார்கள் மீது நாங்கள் நேரடியாக கள ஆய்வு செய்து பல்வேறு குறைபாடுகளையும் கண்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இப்போது அவற்றில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

லோக் ஆயுக்தா தவறு செய்வது யாராக இருந்தாலும் விட்டு வைக்காது. இப்படிச் சொல்வதன் மூலம் நான் அரசியல்வாதிகளை அச்சுறுத்தவில்லை. ஆனால், ஊழலில் ஈடுபடுவோர்கள் யாராக இருந்தாலும், அது முதல்வராகவே இருந்தாலும்கூட சட்டத்திலிருந்து தப்பிக்க இயலாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.

ஊழல் ஒரு புற்றுநோய். ஆனால், அதற்காக நாம் அதை எதிர்த்துப் போராடாமல் இருந்துவிட முடியாது. பொதுமக்கள் ஊழலுக்கு எதிராக வெகுண்டெழ வேண்டும். ஊழல்வாதிகளை அச்சுறுத்த வேண்டும். சமூக மேம்பாட்டுக்காக போராடுபவர்களுக்கு துணை நிற்க வேண்டும்” என்று லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x