Published : 22 Apr 2023 04:35 AM
Last Updated : 22 Apr 2023 04:35 AM
புதுடெல்லி: புதிய இந்தியாவின் துரித வளர்ச்சியில் குடிமைப் பணி அதிகாரிகள் (ஐஏஎஸ்) முக்கிய பங்காற்றுகின்றனர் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் 16-வது சிவில் சர்வீசஸ் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி குடிமைப் பணிஅதிகாரிகள் இடையே பேசியதாவது: பொருளாதாரத்தில் 5-வது மிகப் பெரிய நாடாக இந்தியா தற்போது உள்ளது.
குடிமைப் பணி அதிகாரிகளின் தீவிர பங்களிப்பு இல்லாமல், இந்தியாவின் துரித வளர்ச்சி சாத்தியமில்லை. நாட்டின் முன்னேற்றத்தில் குடிமை பணி அதிகாரிகளின் பங்களிப்புக்கு பாராட்டுகள். நீங்கள் இன்னும் கடினமாக பணியாற்ற வேண்டும். ஒரு அதிகாரியாக, தனிப்பட்ட சாதனைகளால், உங்களின் சிறப்பு தகுதிகள் தீர்மானிக்கப்படாது. ஆனால், உங்களது பணியால் மக்களின் வாழ்க்கையில் எவ்வாறுமாற்றம் ஏற்படுகிறது என்பதை வைத்துதான் நீங்கள் தீர்மானிக்கப்படுவீர்கள்.
கடைகோடி மக்கள் முக்கியம்: நாடு சுதந்திரம் அடைந்து 75-ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில், நீங்கள் அதே உற்சாகத்துடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். புதிய இந்தியாவின் வளர்ச்சியில் குடிமை பணி அதிகாரிகள் முக்கிய பங்காற்றுவர். அறிக்கையில் திட்டங்கள் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பது முக்கியம் அல்ல. அது கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும்.
கரோனா தொற்று ஏற்பட்ட போதிலும், ஸ்டார்ட் அப் தொழிலில், உலகளவில் 3-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவிடமிருந்து உலக நாடுகளின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சாதனை புரிவதற்கு இந்தியாவுக்கான நேரம் வந்துள்ளது.
நேரத்தையும், வளங்களையும் திறம்பட பயன்படுத்தி அனைவருக் கும் சேவை செய்ய வேண்டும் என்ற தொலைநோக்குடன் மத்தியஅரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாடு மற்றும் மக்கள்தான் முக்கியம் என்பது தொடர்ந்து நமது மந்திரமாக இருக்க வேண்டும்.
டிஜிட்டலில் முதலிடம்: டிஜிட்டல் பணபரிமாற்றத்தில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. மொபைல் டேட்டா கட்டணம் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. நாட்டின் ஊரக பொருளாதாரம் மாற்றம் அடைந்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பொது நிர்வாக பணியில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பிரதமரின் விருதுகளை, மோடி வழங்கினார். குடிமை பணிஅதிகாரிகளின் சிறந் பணிகளுக்கு 15 விருதுகளும் வழங்கப்பட்டன. மக்களின் நலனுக்காக மாவட்டங்கள் மற்றும் மத்திய மாநில அரசு அமைப்புகள் செய்த புதுமையான மற்றும் மிகச் சிறந்த பணிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
பொது நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதை பிரதமரின் கதி சக்தி தேசிய பெருந் திட்டம் பெற்றது. இத்திட்டம் போக்குவரத்து செலவை குறைப்பதற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT