Published : 22 Apr 2023 04:47 AM
Last Updated : 22 Apr 2023 04:47 AM
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவ வாகனம் மீதான தாக்குதலை தொடர்ந்து, தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் பிம்பர் காலி கிராமத்தில் இருந்து சஞ்சியாத் என்ற இடத்துக்கு ராணுவ வாகனம் ஒன்று நேற்று முன்தினம் கொண்டிருந்தது. ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படை வீரர்கள் அதில் இருந்தனர். இந்நிலையில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் அந்த வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் மந்தீப் சிங், தேவசிஷ் பாஸ்வால், குல்வந்த் சிங், ஹர்கிஷன் சிங், சேவக் சிங் என்கிற 5 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். அவர் ரஜோரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலை தொடர்ந்து அடர்ந்த பாட்டா–டோரியா வனப் பகுதியில் பாதுகாப்பு படையினர் விரிவான அளவில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “ஒட்டுமொத்த பகுதியும்சுற்றிவளைக்கப்பட்டு ட்ரோன்கள்மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. ரஜோரி,பூஞ்ச் ஆகிய எல்லை மாவட்டங் களில் உயர் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. பிம்பர் காலி – பூஞ்ச்இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மெந்தார் வழியாக பூஞ்ச் செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை என்ஐஏ அதிகாரிகள் குழு ஆய்வு செய்யவுள்ளது” என்று தெரிவித்தனர்.
ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மற்றும் இந்திய ராணுவத்தின் அனைத்து பிரிவினரும் 5 ராணுவ வீரர்களின் உன்னத தியாகத்திற்கு வீர வணக்கம் செலுத்துவதாக ட்விட்டரில் ராணுவம் தெரிவித்துள்ளது.
ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வேதனை தெரிவித்துள்ளார். தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய செழுமையான சேவையை என்றும் மறக்கமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT