Published : 21 Apr 2023 02:35 PM
Last Updated : 21 Apr 2023 02:35 PM
புதுடெல்லி: சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்துவரும் சூழலில், அங்கு சிக்கித் தவிக்கும் 4000 இந்தியர்களை மீட்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டி ராணுவத் தளபதி அப்தல் ஃபதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையாக ஆர்எஸ்எஃப் பிரிவும் (ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ்) கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அங்கு இதுவரை 330-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
உணவு, தண்ணீர், மருந்துகள், மின்சாரம் என எவ்வித அடிப்படை தேவையும் இல்லாமல் மக்கள் வாடிவருகின்றனர். திடீர் மோதலால் 50 லட்சம் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அங்கு 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் முன்வந்துள்ள நிலையில், அங்கு சிக்கியிருக்கும் 4,000 இந்தியர்களின் மீட்புப் பற்றி பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களிடம் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘சூடானில் நிலவரம் மிகவும் பதற்றமாக உள்ளது. இந்திய சமூகத்தின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதில் கவனம் செலுத்திவருகிறோம். விரைவில் அங்கிருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என்று கூறியிருந்தது.
வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சியும், "சூடானில் சிக்கியுள்ள ஒவ்வொரு இந்தியரின் நலன் குறித்தும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். அங்கு சிக்கியுள்ள இந்தியர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.
அதேபோல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சூடான் நிலவரத்தை கூர்ந்து கவனித்து வருகிறோம். கள நிலவரத்தைப் பொறுத்து இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றுவது தொடர்பாக குறிப்பிட்ட சில நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தது. அதேபோல் சூடானில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டினின் உடலை கொண்டுவருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT