Published : 21 Apr 2023 05:07 AM
Last Updated : 21 Apr 2023 05:07 AM

அவதூறு வழக்கில் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை கோரிய ராகுல் மனு தள்ளுபடி: சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சூரத்: அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019-ல் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி எனப் பெயர் வந்தது எப்படி?" என்று விமர்சித்தார். இதுதொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ்மோடி சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும்வரை குற்றவாளி என்று அறிவித்ததற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார்.

இந்த இரண்டு மனுக்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.பி.மொகேரா, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்ததுடன் ஜாமீன் வழங்கினார். ராகுல் குற்றவாளி என அறிவித்ததற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரும் மனு மீது பதில் அளிக்குமாறு புர்னேஷ் மோடிக்கும் குஜராத் மாநில அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த மனு மீது கடந்த 13-ம் தேதி விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 20-ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், அவதூறு வழக்கில் குற்றவாளி என சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நிதிபதி அளித்த தீர்ப்பில், “கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கும் விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையுடனும் இதற்கு முன்பு பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்படியும் செயல்பட வேண்டி உள்ளது. ஏனென்றால், இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம்.

மேலும் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்காவிட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(3) பிரிவின் கீழ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும். இதனால் ராகுல் காந்திக்கு திரும்பப்பெற முடியாத அளவுக்கு இழப்பு ஏற்படும் என்பதை அவரது வழக்கறிஞர் நிரூபிக்கத் தவறிவிட்டார்” என கூறப்பட்டுள்ளது.

மேல்முறையீடு: இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கிரித் பான்வாலா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x