Published : 21 Sep 2017 09:42 AM
Last Updated : 21 Sep 2017 09:42 AM
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க இந்திய உணவு பாதுகாப்பு மையத்திலிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் சட்டப்படி உரிமம் பெற்றுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். ஏழுமலையானின் தரிசனம் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு இலவச சிறிய லட்டு, சாதாரண லட்டு, கல்யாண லட்டு விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் சுமார் 3 லட்சம் லட்டுகள் வரை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதுவே பிரம்மோற்சவம் போன்ற நாட்களில் கூடுதல் லட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.
ஆனால் இந்த லட்டுவின் தரம் குறைந்து விட்டதாக கர்நாடக மாநில பக்தர் ஒருவர் இந்திய உணவு பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஆய்வு செய்வதற்காக, சில மாதங்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திருமலைக்கு வந்தனர். ஆனால், லட்டு பிரசாதத்தை உணவுப் பொருளாக பார்க்கக் கூடாது எனக் கூறி, லட்டு தயாரிக்கும் ‘போட்டு’ எனுமிடத்திற்குள் அதிகாரிகளை அனுமதிக்க தேவஸ்தான அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் இந்திய உணவு பாதுகாப்பு மைய அதிகாரிகள் ஆய்வு செய்யாமலேயே திரும்பி சென்றனர்.
இதுகுறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமோ என்று எண்ணிய தேவஸ்தான நிர்வாகம், தற்போது இந்திய உணவு பாதுகாப்பு மையத்திலிருந்து லட்டு பிரசாதம் தயாரிக்க சட்டப்படி உரிமம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT