Published : 20 Apr 2023 07:19 PM
Last Updated : 20 Apr 2023 07:19 PM
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்; ஒருவர் காயமடைந்தார். இது விபத்தாக இருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதலே இதற்குக் காரணம் என்று ராணுவம் உறுதி செய்து தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மாலை 3.15 மணியளவில் நடந்துள்ளது. ராணுவ வாகனம் பிம்பர் காலியிலிருந்து பூஞ்ச் பகுதியிலுள்ள சங்கியோடிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததற்கு அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள்தான் காரணம். கையெறி குண்டுகளை வீசி அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம்.
இந்தத் தாக்குதலில் துரதிருஷ்டவசமாக ராஷ்ட்ரிய ரைபில் பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த ஒரு வீரர் ரஜோரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்துததும் பூஞ்சிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள அந்தப் பகுதிக்கு 13 பிரிவு ராஷ்ட்ரிய ரைபில் படையின் தலைவர் விரைந்து சென்றதாக தகவல் வெளியானது.
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி மாவட்டத்தின் கத்ரா பகுதியில் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்; 22 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்திற்கு உள்ளூர் தீவிரவாத குழுவான ஜம்மு காஷ்மீர் விடுதலை வீரர்கள் என்ற அமைப்பு பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டது. அந்த அமைப்பு அதன் சிறப்புப் படை ஒன்று சக்திவாய்ந்த எல்இடி வெடிகுண்டுமூலம் இதனை நிகழ்த்தியதாக தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment