Last Updated : 20 Apr, 2023 05:05 AM

4  

Published : 20 Apr 2023 05:05 AM
Last Updated : 20 Apr 2023 05:05 AM

கர்நாடகாவில் 130-க்கும் மேற்பட்ட தொகுதிக‌ளில் காங்கிரஸ் வெற்றி பெறும் - சித்தராமையா சிறப்பு பேட்டி

பெங்களூரு: கர்நாடகாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் சித்தராமையா. 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில் எம்எல்ஏ, அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், துணை முதல்வர், முதல்வர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். 75 வயதை கடந்த இவர், கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் முன்னணி தளபதியாக களமாடிக் கொண்டிருக்கிறார். பரபரப்பான சூழலில் நமது கேள்விகளுக்கு சித்தராமையா அளித்த பதில்கள்:

கடந்த 6 மாதங்களாக கர்நாடகா முழுவதும் பயணித்திருக்கிறீர்கள். தினமும்கட்சி சாராத பொதுமக்களை சந்திக்கிறீர்கள்? காங்கிரஸ் வெற்றிபெறும் என நீங்கள் சொல்கிறீர்கள். உண்மையில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?

50 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக அரசியலை கவனித்து வருகிறேன். ஒரு அரசியல்வாதியாக 14 தேர்தல்களை சந்தித்து இருக்கிறேன். மக்களின் நாடித்துடிப்பை நன்கு கணிப்பவன் என்ற முறையில் சொல்கிறேன். மக்களின் மனநிலை பாஜகவுக்கு எதிராக இருக்கிறது. பல இடங்களில் ஆட்சியாளர்களின் மீது மக்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். எனவே இந்த முறை காங்கிரஸ் நிச்சயம் தனித்து ஆட்சி அமைக்கும். 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும். பாஜக 60 முதல் 65 தொகுதிகளையும், மஜத 20 முதல் 25 தொகுதிகளையும் பிடிக்கும்.

ஆனால் பாஜகவினர் மோடி அலை வீசுவதாக சொல்கிறார்களே? 2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக நடக்கும் தேர்தல் என்பதால் இதில் கூடுதலாக கவனம் செலுத்துகிறார்கள். வேட்பாளரை முன்னிறுத்தாமல் மோடியை முன்வைத்து பிரச்சாரம் செய்கிறார்களே?

மோடி அலை எங்கும் வீசவில்லை. அவர்கள் மோடியை முன்வைத்து பிரச்சாரம் செய்வதை பார்க்கும் போது அடுத்த மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை இப்போதே தொடங்கி விட்டார்களா என சந்தேகம் வருகிறது. வாராவாரம் மோடியும் அமித் ஷாவும் அடிக்கடி வந்துகொண்டிருக்கிறார்கள். காங்கிரஸை வீழ்த்த எல்லா வழிகளிலும் பாஜக சதி செய்கிறது. இதையெல்லாம் மீறி கர்நாடக மக்கள் காங்கிரஸை வெற்றிபெறச் செய்வார்கள்.

அப்படியென்றால் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் யார்? முதல்வர் விவகாரத்தில் உங்களுக்கும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றனவே?

முதல்வர் பதவிக்கான போட்டியில் நானும் இருக்கிறேன். டி.கே.சிவகுமாரும் இருக்கிறார். ஆனால் யார் அடுத்த முதல்வர் என்பதை தேர்தலுக்குப்பின் எம்எல்ஏக்களும், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களும் தீர்மானிப்பார்கள்.

கடந்த முறை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேர் பாஜகவுக்கு தாவியதால் உங்களின் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இந்த முறையும் வெற்றி பெறும் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவ மாட்டார்கள் என உறுதியாக கூற முடியுமா? பாஜகவில் இருந்து வந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமன் சவதி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு சீட் கொடுத்திருக்கிறீர்கள். தேர்தலுக்கு பிறகு இவர்கள் மீண்டும் பாஜக பக்கம் போய்விட்டால் என்ன செய்வீர்கள்?

காங்கிரஸின் கொள்கையில் பிடிமானம் இல்லாதவர்களே கட்சி தாவுவார்கள். அவர்கள் மேல் நம்பிக்கைவைத்து சீட் தருகிறோம். பணத்துக்காகவும், பதவிக்காகவும் கட்சி மாறுபவர்களை யாராலும் தடுக்க முடியாது. கட்சியின் தலைமைக்கும் வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு கட்சி தாவுபவர்களை என்ன செய்ய முடியும்? அவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும்.

காங்கிரஸுக்காக நீண்ட காலம் உழைத்தவர்களுக்கு சீட் மறுக்கிறீர்கள். கொள்கை பிடிமானம் இல்லாதவர்களுக்கு சீட் வழங்குகிறீர்கள். கட்சித் தாவலை தடுக்க சீட் வழங்கும்போதே வேட்பாளரின் கட்சி விசுவாசம், கொள்கை பிடிமானம், நேர்மை உள்ளிட்டவற்றை பரிசீலிக்கலாமே?

நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் இன்றைய தேர்தல் அரசியல் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சீர்கெட்டுப் போய் இருக்கிறது. இங்கு நேர்மை, விசுவாசம், உழைப்பு ஆகியவற்றுக்கு எந்த மரியாதையும் கிடைப்பதில்லை. ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதற்கு பண பலம், சாதி பலம், ஆள் பலம், கட்சி பலம், தலைவர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. பாஜக போன்ற பலமான கட்சி எதிரில் இருக்கும்போது, அதனை வெல்லக்கூடிய சக்தி வாய்ந்தவருக்கே சீட் வழங்கி இருக்கிறோம். இப்போது சீட் கிடைக்கப் பெறாதவர்களுக்கு, வேறு வாய்ப்புகளை உருவாக்கித் தருவோம்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பசுவதை தடுப்பு சட்டம், மதமாற்ற தடை சட்டம், ஹிஜாப் தடை போன்றவற்றை ரத்து செய்யப் போவதாக கூறி இருக்கிறீர்கள். இது சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து, தேர்தல் நேரத்தில் சொல்லப்படும் வழக்கமான வாக்குறுதியா?

நிச்சயமாக இல்லை. இந்துக்களின் வாக்குகளை கவருவதற்காகவே பாஜக ஹிஜாப் தடை, பசுவதை தடுப்பு சட்டம், மதமாற்ற தடை சட்டம் போன்றவற்றை கொண்டுவந்தது. இதனால் அப்பாவி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். முன்னெப்போதைக் காட்டிலும் மத ரீதியான மோதல்கள் அதிகரித்துள்ளன. அடிப்படையில் இந்த சட்டங்கள் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானவை. எனவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை கண்டிப்பாக ரத்து செய்வோம்.

கர்நாடகத் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவை கோரி இருக்கிறீர்களா?

அதுபற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் கோரிக்கை விடுத்தால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்காக குரல் கொடுப்பார். விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய வருவதாக கூறியிருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள்.

உங்களுக்கு கட்சியின் உள்ளேயும் வெளியேயும் எதிரிகள் இருக்கிறார்கள். இந்த பல்முனை தாக்குதலை வருணா தொகுதியில் எப்படி எதிர்க்கொள்ள போகிறீர்கள்?

காங்கிரஸில் எனக்கு எதிரிகள் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. பாஜகவுக்கு என்னைக் கண்டால் பயம். அதனால் அமைச்சர் சோமண்ணாவை எனக்கு எதிராக நிறுத்தி இருக்கிறது. ஆனால் வருணா மக்கள் என்னை நிச்சயம் வெற்றி பெறச் செய்வார்கள்.

இது தான் எனது கடைசித் தேர்தல்: சித்தராமையா கூறுகையில், ‘‘இந்த தேர்தல் தான் நான் போட்டியிடும் கடைசி தேர்தல். இதற்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி விடுவேன். அதன் பிறகு எனது மகன் யதீந்திராவும், பேரன் தவன் ராகேஷூம் தேர்தலில் போட்டியிடுவார்கள். எனது கடைசித் தேர்தல் என்பதால் வருணா மக்கள் என்னை கைவிட மாட்டார்கள்'' என்றார். கடந்த 2013 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதுபோல் சித்தராமையா கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x