தன்பாலின திருமண வழக்கில் அனைத்து மாநிலங்களும் கருத்து தெரிவிக்க அழைப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய பிரமாண பத்திரம் தாக்கல்
புதுடெல்லி: தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த புதிய பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவ. 25-ம் தேதி இரண்டு தன்பாலின திருமண தம்பதிகள் தங்களின் திருமண உரிமையை சட்ட ரீதியாக அங்கீகரிக்க கோரி தனித்தனியாக மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்கள் மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
அப்போது, இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்துகளை கேட்டறிவது முக்கியம் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு மனுதாரர்களின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசு புதிய பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:
தன்பாலின திருமணம் என்பது மிகவும் முக்கியமான அதேசமயம் சிக்கலான பிரச்சினையும் கூட.அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள திருமணம் என்ற அமைப்பானது பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு கூறுகளும் உள்ளார்ந்த வகையில் ஒன்றோடொன்று தொடர்புடையது. அதுமட்டுமின்றி அதில் மேற்கொள்ளப்படும் மாற்றம் அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.
எனவே இந்த விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்துகளை கேட்டறிவது மிகவும் முக்கியமானது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர்கள் பதிலளிக்க கோரி அனைத்து மாநிலங்களுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், “இந்த விவகாரத்தில் எந்த முடிவு எடுத்தாலும் மாநிலங்களின் உரிமைகள், குறிப்பாக, சட்டமியற்றும் உரிமை பாதிக்கப்படும் என்பது மத்திய அரசின் கருத்தாகும்’’ என்றார்.
