Published : 20 Apr 2023 07:24 AM
Last Updated : 20 Apr 2023 07:24 AM
புதுடெல்லி: போதைப் பொருட்களை கடத்துவோர், விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு தலைவர்களின் முதல் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாட்டிலிருந்து போதைப் பொருட்களை முற்றிலும் ஒழித்துக் கட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு சுதந்திரமடைந்து நூற்றாண்டை 2047-ல் கொண்டாடும்போது போதைப் பொருட்கள் இல்லாத இந்தியாவாக மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. நாட்டில் போதைப் பொருட்களைக் கடத்துவோர், விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்துக்கு முக்கிய காரணம் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்தான். இந்த போதைப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும் மக்கள் பெரும் பாதிப்பு அடைகின்றனர்.
நாட்டில் போதைப் பொருட்களைத் தடுக்க கடும் நடவடிக்கையை எடுக்க அரசியல் வேற்றுமைகளை மாநில அரசுகள் மறந்துவிட்டு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT