Published : 20 Apr 2023 04:52 AM
Last Updated : 20 Apr 2023 04:52 AM

2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தி மனு மீது இன்று தீர்ப்பு?

அகமதாபாத்: அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீது இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான ராகுல், ‘‘எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?’’ என்று விமர்சித்தார்.

இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 23-ம் தேதி ராகுல் குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இதையடுத்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும்வரை, குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார்.

இந்த இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.பி.மொகேரா, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்ததுடன் ஜாமீன் வழங்கினார். ராகுல் குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரும் மனு மீது பதில் அளிக்குமாறு புர்னேஷ் மோடிக்கும் குஜராத் மாநில அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த மனு மீது கடந்த 13-ம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, ராகுல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா, “இந்த வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்கவில்லை. மேலும் இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.

இந்த வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால் ராகுலின் எம்.பி., பதவி தகுதி இழப்பு ரத்தாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x