Published : 20 Apr 2023 05:10 AM
Last Updated : 20 Apr 2023 05:10 AM
மும்பை: பாஜக கூட்டணியில் அஜித் பவார் இணைந்தால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மகாராஷ்டிர அரசிலிருந்து வெளியேறும் என்று சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து வெளியேறிய மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பாஜக இணைந்து புதிய ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சிவசேனா பிரிவுதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத் பவாரின் மருமகனும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார், பாஜகவுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இதற்கு சரத் பவார் ஆதரவளிப்பாரா அல்லது கட்சியில் பிளவு வெடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 53 எம்எல்ஏக்களில் சுமார் 40 பேர் அஜித் பவாரின் முயற்சிக்கு ஆதரவளிக்க ஒப்புதல் கையொப்பமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதை அஜித் பவார் மறுத்துவிட்டார்.
இதனிடையே, அஜித் பவார் பாஜக கூட்டணிக்கு வந்தால் நாங்கள் மகாராஷ்டிர கூட்டணி அரசிலிருந்து வெளியேறுவோம் என்று சிவசேனா செய்தித் தொடர்பாளர் ஷிர்சத் அறிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: சிவசேனா மற்றும் பாஜகவின் கொள்கைகளை அஜித் பவார் ஏற்றுக்கொண்டால் நாங்கள் அவரை வரவேற்போம். ஆனால், பாஜகவுடன் அஜித் பவார் கூட்டணி அமைத்தால், ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி, மகாராஷ்டிர அரசில் அங்கம் வகிக்காது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம். சிவசேனா கட்சியில் முன்பு அதிருப்தி இருந்தது போல் இப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி நிலவி வருகிறது.
அஜித் பவார் அக்கட்சியில் நீடிக்க விரும்பவில்லை. மேலும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் தலைமையையும் அவர் ஏற்கவில்லை. அஜித் பவாருக்குஎந்த சுதந்திரமும் வழங்கப்படவில்லை என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT