Published : 19 Apr 2023 04:17 PM
Last Updated : 19 Apr 2023 04:17 PM

கர்நாடக தேர்தல் சுவாரஸ்யம்: தொகுதி மக்களிடம் சில்லறை பெற்று வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை

யத்கிரி: கர்நாடகாவின் யத்கிரி தொகுதியில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தொகுதி மக்களிடம் சில்லறைகளைப் பெற்று அதைக் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்.

கர்நாடகாவின் வடமேற்கே உள்ள சட்டமன்றத் தொகுதி யத்கிரி. இந்தத் தொகுதியைச் சேர்ந்த இளைஞரான யங்கப்பா, தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து, தொகுதி மக்களிடம் சில்லறையாக பணம் சேகரித்துள்ளார். அவர்கள் கொடுத்த சில்லறைகளைக் கொண்டு, வேட்புமனு தாக்கலின்போது செலுத்த வேண்டிய வைப்புத் தொகையான ரூ. 10 ஆயிரத்தை யங்கப்பா செலுத்தி உள்ளார். தேர்தல் அதிகாரியிடம், வைப்புத் தொகை முழுவதையும் சில்லறையாகக் கொடுத்து மனு தாக்கல் செய்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுவாமி விவேகானந்தர் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான யங்கப்பா, வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''எனது சமூக மக்களுக்காகவும் கிராம மக்களுக்காகவும் நான் எனது வாழ்க்கையை அர்ப்பணிப்பேன். சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் அடங்கிய போஸ்டருடன்தான் நான் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து எனது வேட்புமனுவை தாக்கல் செய்தேன்'' என்று தெரிவித்தார்.

கர்நாடகாவின் முதல்வரும் முன்னாள் முதல்வர்கள் இருவரும் இன்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். முதல்வர் பசவராஜ் பொம்மை, ஷிக்கோன் தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, கன்னட நடிகர் கிச்சா சுதீப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னாள் முதல்வரும் பாஜகவில் இருந்து காங்கிரசில் இணைந்தவருமான ஜெகதீஷ் ஷெட்டர், ஹூப்லி-தார்வாட் மத்திய தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமைய்யா வருனா தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x