Published : 19 Apr 2023 03:23 PM
Last Updated : 19 Apr 2023 03:23 PM

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேபாள அதிபர் ராம்சந்திர பவ்டெல் அனுமதி

புதுடெல்லி: நேபாள அதிபர் ராம்சந்திர பவ்டெல் மருத்துவ சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேபாள அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற ராம்சந்திர பவ்டெலுக்கு இம்மாத தொடக்கத்தில் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, காத்மாண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏப்ரல் 1ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில், நேற்று மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, காத்மாண்டுவில் உள்ள டியு பயிற்சி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நெஞ்சுப் பகுதியில் தொற்று ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

பிரதமர் புஷ்ப கமல் தஹால், துணை பிரதமர் பூர்ண பகதுர் கட்கா ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து, அதிபரின் உடல்நிலை குறித்து விசாரித்தறிந்தனர். பின்னர், அமைச்சரவைக் கூட்டப்பட்டு, அதிபரின் உடல்நிலை தொடர்பாக அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சுகாதாரத் துறைச் செயலாளர் தலைமையில் மருத்துவக் குழு அவரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க பணிக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையின்படி, அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணி அளவில் அதிபர் ராம்சந்திர பவ்டெல், விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் அவரது மகன் சிந்தன் பவ்டெல் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.

நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம்சந்திர பவ்டெல், அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டார். நேபாள காங்கிரஸ், பிரதமர் புஷ்ப கமல் தஹால் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் சென்டர்) உள்ளிட்ட 8 கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. அவருக்கு 214 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 352 மாகாண சபை உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x