Published : 01 Sep 2017 11:35 AM
Last Updated : 01 Sep 2017 11:35 AM

அமெரிக்காவில் ஹார்வே சூறாவளியால் வீடுகளை இழந்து தவிக்கும் தெலுங்கர்கள்

அமெரிக்காவில் ஹார்வி சூறாவளி காரணமாக சுமார் 10 ஆயிரம் தெலுங்கர் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் தங்களது வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

அமெரிக்காவில் தற்போது ஹார்வி சூறாவளியால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெக்ஸாஸ், லூசியானா போன்ற மாகாணங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதிகளில் பலத்த சூறாவளி வீசியதோடு, மழையால் வெள்ளமும் ஏற்பட்டு ஹூஸ்டன் நகரம் மூழ்கி உள்ளது.

சூறாவளி மற்றும் வெள்ளத்தால் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் பல இடங்களில் இருந்து சரியான தகவல்கள் வரவில்லை. இதனால் உயிரிழப்பு கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து டெக்ஸாஸ், லூசியானா மாநிலங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.35 லட்சம் நஷ்டம்

இந்நிலையில், ஹார்வி சூறாவளியால் வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் கேத்தே, ஷுகர் லாண்ட், சிப்ரஸ், பெல்லய்ர் ஆகிய பகுதிகளில் அதிகமாக தெலுங்கர்கள் வசித்து வருகின்றனர். பொறியாளர்கள், மருத்துவர்கள் என இப்பகுதியில் சுமார் 10 ஆயிரம் தெலுங்கு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் பலர் வெள்ளத்தால் வீடுகளை இழந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் சுமார் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 35 லட்சமாகும்.

இந்த இயற்கை பேரழிவிற்கு இன்சூரன்ஸ் கிடையாது என்பதால், வீடுகளை இழந்து தவிப்போரின் நிலை படு மோசமடைந்துள்ளது. வங்கி கடன் வாங்கியாவது வீட்டை புதுப்பிக்க இவர்களது பொருளாதாரம் இடம் அளிக்காது என்பதால் என்ன செய்வதென இவர்கள் தவித்து வருகின்றனர். ஆனால் அமெரிக்க அரசு இதுபோன்று வீடு இழந்து தவிப்போருக்கு உதவி செய்யும் என கூறியுள்ளது.

இப்பகுதியில் உள்ள 2 அடுக்கு மாடியில் குடியிருப்பவர்கள் மட்டும் மேல் மாடியில் பத்திரமாக தங்கி உள்ளனர். மேலும் வெள்ளத்தில் பாம்புகள், முதலைகள் கூட வரத் தொடங்கி விட்டதால், இப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x