Published : 18 Apr 2023 06:08 PM
Last Updated : 18 Apr 2023 06:08 PM

கரோனா குறித்த பீதி பரவாமல் தடுக்கப்பட வேண்டும்: மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி: கரோனா குறித்த பீதி பரவாமல் தடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

ஜி20 சுகாதாரப் பணிக் குழுவின் இரண்டாம் அமர்வில் பங்கேற்று மன்சுக் மாண்டவியா உரையாற்றினார். அப்போது, ''கரோனா குறித்த பீதி பரவக் கூடாது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பீதி பரவுவதை தடுக்க வேண்டும். அதேநேரத்தில், கரோனாவுக்கு எதிரான தயார் நிலைகளை மேற்கொள்வதில் சோர்வுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. ஜி20 தலைமைப் பொறுப்பில் இதற்கு முன் இத்தாலியும், இந்தோனேஷியாவும் இருந்தபோது இருந்த கரோனாவுக்கு எதிரான செயல்முறையின் வேகம் தற்போதும் தொடர இந்தியா திட்டமிட்டுள்ளது.

கரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேச ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியம். இதைக் கருத்தில் கொண்டே இந்தியா டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் சுகாதாரத் துறையில் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவற்றை ஊக்குவித்து வருகிறது. மேலும், தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு சுகாதாரத் துறையில் இருக்கும் இடைவெளியை நிரப்பவும், மக்கள் நலனுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வளர்க்கவும் இந்தியா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. உலக சுகாதாரத்தில் நம்பிக்கை அளிக்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஜி20 சுகாதார பணிக் குழு முன்னிலை வகிக்கிறது'' என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், ''ஜி20 தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியாவின் நோக்கம், 'வசுதைவ குடும்பம்' (உலகம் ஒரு குடும்பம்) என்ற பண்டைய தனது தத்துவத்தை வலியுறுத்துவதே. குறைந்த செலவில் தரமான சுகாதாரம் உலக மக்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய சுகாதார அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x