Published : 18 Apr 2023 03:09 PM
Last Updated : 18 Apr 2023 03:09 PM

“இங்கே நாங்கள்தான் பொறுப்பு” - தன்பாலினத்தவர் திருமண வழக்கில் மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் காட்டம்

உச்ச நீதிமன்ற விசாரணை

புதுடெல்லி: தன்பாலினத்தவர் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, மத்திய அரசை சரமாரியாக கடிந்து கொண்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) வெகு சில நிமிடங்களே நடந்தாலும் கூட அனல் பறக்கும் விவாதங்கள் நீதிமன்றத்தில் நடைபெற்றன.

அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், “இது நீதிமன்றம். இங்கே நாங்கள் தான் பொறுப்பாளர்கள். வழக்கை எப்படி நடத்தவேண்டும் என்பதெல்லாம் நீங்கள் எங்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாகக் கூறினர்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: “நாட்டின் 5 கற்றறிந்த அறிவுஜீவிகள் சொல்வதைக் கேட்டெல்லாம் ஒட்டுமொத்த தேசத்திற்கான முடிவையும் எடுக்க முடியாது. இவர்கள் கோரிக்கையை வைத்துக் கொண்டு திருமணம் எனும் அமைப்பிற்குள் ஒரு புதிய சட்டபூர்வ சமூகக் குழுவை உருவாக்கிட முடியாது. அதனால், நீதிபதிகள் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்திடமே விட்டுவிடுவது நல்லது. நாடாளுமன்றம் முடிவெடுக்கும். தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரும் தனிநபர்கள் இதை நாடாளுமன்றம் பரிசீலிக்கும் முன்னரே ஏன் நீதிமன்றத்தை நாடினர் என்பதை இந்த நீதிமன்றம் முதலாவதாக விசாரிக்க வேண்டும்.”

தலைமை நீதிபதி சந்திரசூட்: “மன்னிக்கவும் மிஸ்டர் சாலிசிட்டர் ஜெனரல். இங்கு நாங்கள்தான் பொறுப்பில் இருக்கிறோம். வழக்கு விசாரணைகளை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் எங்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை.”

துஷார் மேத்தா: “இந்த வழக்கில் இனியும் பங்கேற்பதில் அரசுக்கு தயக்கம் இருக்கிறது.”

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்: “அப்படியென்றால் இனி இந்த வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பு ஆஜராகாது என்கிறீர்களா? வழக்கில் அரசாங்கம் பங்கேற்காது என்று சொல்வதெல்லாம் சரியில்லை. இது எங்கள் முன்னால் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை.”

துஷார் மேத்தா: “இந்த விஷயத்தை வெறும் ஐந்து அறிவுஜீவிகளின் கருத்தைவைத்து மட்டும் முடிவு செய்யக்கூடாது என்பதைத்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். தன்பாலினத்தவர் திருமணம் பற்றி நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு விவசாயி என்ன நினைக்கிறார்? வடகிழக்கு மாநிலத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் என்ன கருதுகிறார் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. சொல்லப்போனால், தன்பாலினத்தவர் திருமணங்கள் விவகாரத்தில் நாம் யாருமே தேசத்தின் கருத்து என்பதை அறியவில்லை என்றே தான் கூறுவேன். அதை விவாதிக்க நாடாளுமன்றமே சிறந்த தளம். இதை நான் இங்கு இன்று சொல்லாவிட்டால் தலைமுறைகள் கடந்தும் இதனை ஏன் நீதிமன்ற கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை என்ற கேள்வி எழும்.”

மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் கே.வி.விஸ்வநாதன்: (மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள்) “இவ்விவகாரத்தில் நாங்கள் அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 32-ன் அடிப்படையில்தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அனைவரும் சமம், அனைவருக்கும் சமமான வாழ்வுரிமை இருக்கிறது, அதுவும் மாண்பும், மரியாதையும் கூடிய வாழ்க்கையை வாழும் சுதந்திரம் இருக்கிறது என்ற அடிப்படை உரிமைகளின் அடிப்படையிலேயே நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.”

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்: (இன்டர்வீனர்) “தன்பாலினத்தவர் திருமணங்கள் மற்றும் அதன் பின்விளைவுகள் தனிநபர் சட்டங்கள், தத்தெடுத்தல், சொத்துகளை வாரிசுகளுக்கு அளித்தல் எனப் பல்வேறு விஷயங்களிலும் சிக்கலை ஏற்படுத்தலாம். இதைத்தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.”

இவ்வாறாக இன்று நீதிமன்றத்தில் விவாதம் நடந்தது.

பிரமாணப் பத்திரம் முழு விவரம்: முன்னதாக நேற்று மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கோருவது வெறும் நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை ஆதரிப்பதன் மூலம் ஒரு புதிய சமூகத்தை உருவாக்க நீதிமன்றம் முயலக் கூடாது. இந்தப் பணியை நாடாளுமன்றத்திடம் நீதிபதிகள் விட்டுவிட வேண்டும். இதுபோன்ற 'வேறு வகை' திருமணங்களை சமூக ரீதியாகவும், மத ரீதியாகவும் ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள்.

தன்பாலின திருமணம் என்பது அடிப்படை உரிமையாகாது. கிராம மக்கள், சிறிய நகரங்களில் வாழும் மக்களின் குரல்கள், மதப் பிரிவுகள், தனிப்பட்ட சட்டங்கள், பழக்கவழக்கங்கள், மற்ற திருமண முறைகள் மீது தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் ஏற்படுத்தும் விளைவுகள் என விரிந்த பார்வையில் இதனைப் பார்க்க வேண்டும்.

தற்போது திருமணம் என்பது சட்டத்தின்படியும், மதத்தின் படியும் புனிதமானதாக உள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டால், அது ஒவ்வொரு குடிமகனின் நலன்களையும் தீவிரமாக பாதிக்கும். தன் பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களுக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் அளிக்கும் விவகாரம் குறித்து முடிவு எடுப்பதை சட்டப்பேரவையோ அல்லது நாடாளுமன்றமோ மட்டுமே செய்ய முடியும். நீதித்துறை தீர்ப்பால் அல்ல’ என்று தெரிவித்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x