Published : 18 Apr 2023 06:25 AM
Last Updated : 18 Apr 2023 06:25 AM

சொத்து ஆவணங்களுடன் ஆதாரை இணைக்கக் கோரி வழக்கு - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: அசையும் மற்றும் அசையா சொத்து ஆவணங்களுடன் ஆதாரை இணைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “ஊழல், கருப்பு பணம், பினாமி சொத்து பரிமாற்றத்தைத் தடுக்க, அசையும் மற்றும் அசையா சொத்து ஆவணங்களுடன் ஆதாரை இணைக்க உத்தரவிட வேண்டும்” கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சதிஷ் சந்திர சர்மா, நீதிபதி யஷ்வந்த் வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, இது முக்கியமான விஷயம் என தெரிவித்தார்.

மனுதாரரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய் கூறும்போது, “ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத பினாமி சொத்துகளை பறிமுதல் செய்வது அரசின் கடமை. இதன் மூலம் ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்ற தகவல் பொதுமக்களைச் சென்று சேரும். அசையும் மற்றும் அசையா சொத்துகளை ஆதாருடன் இணைத்தால் இதைத் தடுக்கலாம். இதன்மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2% அதிகரிக்கும்.

தேர்தலின்போது முக்கிய பங்கு வகிக்கும் கருப்பு பணமும் பினாமி பரிவர்த்தனையும் ஒழியும். இதனால், தேர்தல் நடைமுறைகள் தூய்மையாகும். பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முடியாத சூழல் ஏற்படும். அரசியல் பலத்தை வைத்து அதிக அளவில் சொத்து குவிப்பதையும் தடுக்கலாம். தீவிரவாதம், நக்சலிசம், சூதாட்டம், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை போன்ற சட்டவிரோத செயல்களுக்கு கருப்பு பணம் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க முடியும்.

ஊழல் மற்றும் கருப்பு பணத்தால் அத்தியாவசிய பொருட்கள், நிலம் மற்றும் தங்கம் உள்ளிட்டவற்றின் விலையும் கடுமையாக உயர்கிறது. இதைத் தடுக்க சொத்து ஆவணங்களுடன் ஆதாரை இணைக்க வேண்டும்” என்றார்.

4 வாரங்களில் பதில்..: இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, “இந்த மனு மீது மத்திய நிதி, சட்டம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை ஜூலை 18-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x