Published : 18 Apr 2023 05:49 AM
Last Updated : 18 Apr 2023 05:49 AM
புதுடெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாவது: தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கோருவது வெறும் நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை ஆதரிப்பதன் மூலம் ஒரு புதிய சமூகத்தை உருவாக்க நீதிமன்றம் முயலக் கூடாது. இந்தப் பணியை நாடாளுமன்றத்திடம் நீதிபதிகள் விட்டுவிட வேண்டும். இதுபோன்ற 'வேறு வகை' திருமணங்களை சமூக ரீதியாகவும், மத ரீதியாகவும் ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள்.
தன்பாலின திருமணம் என்பது அடிப்படை உரிமையாகாது. கிராம மக்கள், சிறிய நகரங்களில் வாழும் மக்களின் குரல்கள், மதப் பிரிவுகள், தனிப்பட்ட சட்டங்கள், பழக்கவழக்கங்கள், மற்ற திருமண முறைகள் மீது தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் ஏற்படுத்தும் விளைவுகள் என விரிந்த பார்வையில் இதனைப் பார்க்க வேண்டும்.
தற்போது திருமணம் என்பது சட்டத்தின்படியும், மதத்தின் படியும் புனிதமானதாக உள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டால், அது ஒவ்வொரு குடிமகனின் நலன்களையும் தீவிரமாக பாதிக்கும். தன் பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களுக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் அளிக்கும் விவகாரம் குறித்து முடிவு எடுப்பதை சட்டப்பேரவையோ அல்லது நாடாளுமன்றமோ மட்டுமே செய்ய முடியும். நீதித்துறை தீர்ப்பால் அல்ல. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT