Published : 18 Apr 2023 06:06 AM
Last Updated : 18 Apr 2023 06:06 AM

தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்

அருண் கோயல்

புதுடெல்லி: தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், நாகரத்னா ஆகியோர் விலகி உள்ளனர்.

தலைமை தேர்தல் ஆணைய ராக ராஜீவ் குமாரும் தேர்தல் ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டேவும், அருண் கோயலும் பணியாற்றி வருகின்றனர். இதில் அருண் கோயல் நியமனத்தை எதிர்த்து தன்னார்வ தொண்டு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

“மத்திய அரசின் செயலாளராக பதவி வகித்த அருண் கோயல் கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தில் பல்வேறு சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என்று மனுவில் கோரப்பட்டு உள்ளது.

இந்த மனு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், நாகரத்னா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏடிஆர் தொண்டு அமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். அவர் கூறும்போது, “160 அதிகாரிகளின் பெயர்களை பரிசீலனை செய்து 4 பேரை தேர்வு செய்ததாகவும் அந்த நால்வரில் அருண் கோயலை தேர்வு செய்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அருண் கோயலின் நியமனம் மின்னல் வேகத்தில் நடைபெற்றிருக்கிறது என்று உச்ச நீதிமன்றமே கூறியிருக் கிறது. சட்ட விதிகளை மீறி அவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வாதிட்டார்.

அப்போது வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் கே.எம்.ஜோசப், நாகரத்னா அறிவித்தனர். வேறு அமர்வுக்கு வழக்கை மாற்ற தலைமை நீதிபதிக்கு அவர்கள் பரிந்துரை செய்தனர்.

முந்தைய வழக்கு: தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக் கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பதை மாற்றக் கோரி ஏடிஆர் தொண்டு அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழுவின் பரிந்துரையின்படி தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும். இதற்கேற்ப நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தற்போது அதே ஏடிஆர் தொண்டு அமைப்பு, தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x