Last Updated : 17 Apr, 2023 08:54 PM

5  

Published : 17 Apr 2023 08:54 PM
Last Updated : 17 Apr 2023 08:54 PM

கள்ளச் சாராயம் படுத்தும் பாடு - கலங்கும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்!

பிஹாரில் கடந்த வெள்ளிக்கிழமை கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 26 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கள்ளச்சாராயம் குடித்துவிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு / நிதி உதவி வழங்க மறுத்து வந்த முதல்வர் நிதிஷ் குமார், தற்போது முதன்முறையாக இழப்பீடு / நிதி உதவி வழங்க முன்வந்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பின் பின்னணி குறித்தும், அரசியல் ரீதியில் அவருக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்தும் சற்றே விரிவாகப் பார்ப்போம்.

இந்திய அரசியல் சாசனத்தில் மாநிலப் பட்டியலின் கீழ் வரக்கூடியது மது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மதுவை மருத்துவக் காரணங்களுக்காக இன்றி போதைக்காக பயன்படுத்துவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று சட்டப் பிரிவு 47 மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துகிறது. என்றாலும், தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மது விற்கப்படும் மாநிலங்களில் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அந்தந்த மாநிலங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இதில், விதிவிலக்காக குஜராத், நாகாலாந்து, மிசோரம், பிகார் ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே உள்ளன. இந்த மாநிலங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் உள்ளது.

இதில், பிஹாரில் கடந்த 2016, ஏப்ரல் 1ம் தேதிதான் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. அதற்கு முன்பு வரை அமலில் இருந்த மது விற்பனை காரணமாக, மது குடித்துவிட்டு வரும் ஆண்களால் பெண்கள் எதிர்கொண்ட பாதிப்புகள் ஏராளம். பிஹாரில் கர்ப்பூரி தாக்கூர் முதல்வராக இருந்தபோது அவர் 1979-ம் ஆண்டு மதுவிலக்கை கொண்டு வந்தார். எனினும், அதை அமல்படுத்துவதில் நிகழ்ந்த ஊழல் காரணமாக அவருக்கு அடுத்து வந்த முதல்வர் ராம் சுந்தர் தாஸ் அதனை திரும்பப் பெற்றார்.

இந்தப் பின்னணியில்தான், பிஹாரில் மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்தக் கோரி அம்மாநில பெண்களும், சமூக அமைப்புகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இதன் காரணமாகவே, 2015 இறுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார் நிதிஷ் குமார். இதையடுத்து, மீண்டும் ஆட்சிக்கு வந்த நிதிஷ் குமார், அளித்த வாக்குறுதிப்படி மதுவிலக்கை அமல்படுத்தினார்.

இதுவரை 300+ பலி: மதுவிலக்கு அமல்படுத்தி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் காரணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ள போதிலும், அங்கு கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்த வண்ணம் உள்ளன. இதுவரை 300-க்கும் அதிகமானவர்கள் கள்ளச் சாராயத்தால் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்படும்போதெல்லாம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழும். உயிரிழந்தவர்களின் குடும்பப் பின்னணியைக் காரணம் காட்டி, இந்த கோரிக்கை முன்வைக்கப்படும்.

எனினும், கடந்த 7 ஆண்டுகளாக இத்தகைய கோரிக்கைகளை முழுமையாக நிராகரித்து வந்தார் முதல்வர் நிதிஷ் குமார். அதற்கு அவர் கூறிய காரணம், சட்டத்தை மீறி மது குடிப்பவர்களை அது ஊக்கப்படுத்துவதாக இருக்கும் என்பதுதான். இதன் காரணமாகவே, ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்தபோதும் தனது முடிவில் அவர் உறுதியாக இருந்தார்.

அவரது இந்த உறுதியை குலைத்திருக்கிறது பிஹாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி நிகழ்ந்த கள்ளச் சாராய உயிரிழப்புகள். தொடக்கத்தில் 22 ஆக இருந்த உயிரிழப்பு தற்போது 26 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து இன்று (ஏப்ரல் 17) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், ''கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்திருப்பது எனக்கு வலியை ஏற்படுத்தி உள்ளது. மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தியபோதிலும், அதையும் மீறி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.

முதல் முறையாக நிவாரணம்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கிறேன். அதோடு, 2016 முதல் கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் இதேபோல் நிவாரணம் வழங்கப்படும். அவர்கள் அரசுக்கு மனு அளித்து நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த நிவாரணம் நிபந்தனையோடுதான் வழங்கப்படும். கள்ளச்சாராயம் குடித்துதான் தங்கள் குடும்பத்தில் உயிரிழப்பு நேர்ந்தது என்பதையும், கள்ளச் சாராயத்துக்கு எதிராக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றும் எழுத்துபூர்வமாக அவர்கள் உறுதி அளிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

அதோடு, ''பிஹாரில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் கிடையாது. அனைத்து அரசியல் கட்சிகளும், பெண்களும் வலியுறுத்தியதைத் தொடர்ந்தே மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது'' என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல் காரணி: முதல்வர் நிதிஷ் குமாரின் முடிவில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வரவேற்பு இருந்தாலும், அரசியல் ரீதியாக விமர்சனமும் எழுந்துள்ளது. ''கள்ளச் சாராய உயிரிழப்புகள் ஏற்படும்போது கீழ்மட்டத்தில் இருக்கக் கூடிய காவலர்களே தண்டிக்கப்படுகிறார்கள். அவர்களை அரசு தற்காலிக பணியிடை நீக்கம் செய்கிறது. ஆனால், டிஜிபியோ, தலைமைச் செயலரோ, ஏன் உள்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் நிதிஷ் குமாரோ இதற்கு பொறுப்பேற்பதில்லை. சாம்பரன் மாவட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும். ஏனெனில், இந்த கள்ளச்சாராய விற்பனைக்கு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் சாம்ராட் சவுத்ரி.

கடந்த ஆண்டு பிகாரின் சரன் மாவட்டத்தில் உள்ள சாப்ராவில் கள்ளச் சாராயம் குடித்து 43 பேர் இறந்தனர். அப்போது, கள்ளச் சாராயம் குடிப்பவர்கள் சாகட்டும் என கூறியவர் நிதிஷ் குமார். அவரது இந்த பேச்சு மனிதாபிமானமற்றது என அப்போது எதிர்க்கட்சிகள் சாடின. அதோடு, பிஹாரில் மதுவிலக்கு முறையாக அமல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசின் மீது உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட குடும்ப ஆரோக்கியம் குறித்த தேசிய ஆய்வறிக்கையில், மதுவிலக்கை அமல்படுத்தாத மகாராஷ்ட்ராவைவிட பிஹாரில் மது பயன்பாடு அதிகம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கள்ளச் சாராய உயிரிழப்புகள் முதல்வர் நிதிஷ் குமாருக்கு வேதனையை ஏற்படுத்தி இருந்தாலும், மதுவிலக்கை திரும்பப் பெறுவது குறித்தும் அவர் யோசிக்கிறாரோ என்ற சந்தேகத்தை அவரது பேச்சு உணர்த்துகிறது. சட்டம் சார்ந்தும், மாநில மக்களின் நலன் சார்ந்தும் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை இது. மதுவிலக்கை பல பத்தாண்டுகளாக குஜராத் அமல்படுத்தி வருகிறது. அங்கும் கள்ளச் சாராய விற்பனை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். ஆனால், பிஹாரைப் போன்ற நிலை அங்கு இல்லை. காரணம், மதுவிலக்கை அமல்படுத்துவதில் அம்மாநில அரசு உறுதியாக இருக்கிறது.

பிஹாரும் அதேபோன்ற உறுதியையோ அல்லது அதைவிட அதிக உறுதியையோ காட்ட வேண்டுமே தவிர, மாற்றுச் சிந்தனைக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. நல்ல நோக்கத்தோடு கொள்கை முடிவுகள் எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை அமல்படுத்துவதில் காட்டும் உறுதிதான். எனவே, பிஹாருக்கான தற்போதைய தேவை, உறுதியான மதுவிலக்கு கொள்கையே. ஏனெனில், மது விலக்கில் பிஹார் வெற்றி பெறுவது, பிஹாருக்கானது மட்டுமல்ல!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x