Published : 17 Apr 2023 09:33 AM
Last Updated : 17 Apr 2023 09:33 AM
பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக முக்கியத் தலைவராக இருந்தவரும், லிங்காயத் சமூகத்தின் வலுவான அடையாளமானவருமான ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜகவிலிருந்து விலகிய மறுநாளே அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் துணை முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான லக்ஷ்மண் சவடி காங்கிரஸில் இணைந்தார். இவரும் லிங்காயத் சமூகத்தைச் சார்ந்தவரே.
ஏற்கெனவே பல்வேறு கருத்துக் கணிப்புகளும் தேர்தல் போக்கு காங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறியுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஒருவர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் பாஜகவில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு இந்தமுறை சீட் வழங்கப்படவில்லை. இதனால் அவர் கடுமையான அதிருப்தியில் இருந்தார். மேலும் ஹூப்ளி தார்வாத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடவிருப்பதாக அறிவித்தார். அதற்கு பாஜக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளைத் தவிர அனைத்துக்கும் இரண்டு கட்டங்களாக பாஜக வேட்பாளர்களை அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருந்த ஷெட்டர் நேற்று பாஜகவிலிருந்து விலகினார். தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்தையும் துறந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டர், எனக்கு டெல்லியில் இருந்து ஓர் அழைப்புவந்தது. அதில் பாஜக மேலிட நிர்வாகி ஒருவர் நான் வரும் தேர்தலில் சுயேச்சையாகக் கூட போட்டியிடக் கூடாது என்றும் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டுமென்றும் கூறினார். அது எனக்கு ஏற்கத்தக்கதாக இல்லை. நான் பிடிவாதக்காரன் இல்லை. ஆனால் இந்த முறை நான் பிடிவாதம் பிடிக்கக் காரணம் கட்சி என்னை அவமரியாதை செய்ததே. கட்சிக்குள் எனக்கெதிராக சதி நடந்தது. அதனால் இந்த முறை நான் கட்சியைவிட எனக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவெடுத்துள்ளேன் என்றார்.
எடியூரப்பா கண்டனம்: ஷெட்டர் பாஜகவிலிருந்து விலகியதற்கு எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார். "கட்சி ஒருபோதும் அவரை வெளியேறுமாறு சொல்லவில்லை. அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அவருடைய குடும்பத்தினர் யாரேனும் ஒருவருக்கு சீட் வழங்குவதாகக் கூட கூறப்பட்டது. அவருக்கு ராஜ்யசபா எம்.பி.பதவி வழங்க கட்சி தயாராக இருந்தது. ஆனால் அவர் அவசரமாக முடிவெடுத்துள்ளார்" என்றார்.
முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், "அமித் ஷா தொலைபேசியில் ஜெகதீஷ் ஷெட்டரிடம் பேசினார். பாஜக லிங்காயத் சமூகத்திற்கு போதுமான அளவு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளது" என்றார்.
நேற்று மாலையே அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சூர்ஜேவாலா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டிகே சிவகுமார், மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோரை சந்தித்தார். இதற்காக ஹூப்ளியில் இருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பயணித்தார். இந்நிலையில் இன்று காலை பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற ஷெட்டர் அங்கு அக்கட்சியில் இணைந்தார். அவர் ஹூப்ளி தார்வாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதே தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT