Published : 17 Apr 2023 04:43 AM
Last Updated : 17 Apr 2023 04:43 AM

ராகுலின் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு பலனளிக்குமா?

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு 13-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அங்கு நடைபெறும் தேர்தலையொட்டி கோலார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார், கே.ஹெச். முனியப்பா உள்ளிட்டோர்.படம்: பிடிஐ

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்கட்சித்தலைவர்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

அடுத்த வருடம் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக, வலுவான எதிர்க்கட்சிகள் அணி திரண்டால் தவிர வெல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக, ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் இருதினங்களுக்கு முன்டெல்லி வந்திருந்தார். அவருடன், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலுவின் மகனான தேஜஸ்வீ பிரசாத் யாதவும் உடன் இருந்தார். இருவரும் காங்கிரஸின் தலைவர்களான மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இதன் அடுத்தகட்டமாக, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, தேசியவாதக் காங்கிரஸின் தலைவர் சரத்பவார் சில ஆலோசனைகள் அளித்திருப்பதாகத் தெரிகிறது.

இதன்படி, ராகுல் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க மாநில முதல்வருமான மம்தா, மகராஷ்டிராவின் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து பேசத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பில் ராகுல், எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரிடமும் நேரடியாக அவர்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பதை கேட்டறிய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் அணியில் காங்கிரஸ் இணைவதை தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா எதிர்த்து வருகிறார். இதனால் அவர், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சிக்கும் 3-வது அணியில் சேரும் ஆர்வம் காட்டி வருகிறார். இதில், உ.பி.முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதியின் தலைவருமான அகிலேஷ்சிங் மற்றும் ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரும் ஆதரவு அளித்துள்ளனர். இச்சுழலில், ராகுலின் எதிர்க்கட்சிதலைவர்கள் சந்திப்பு பலனளிக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் தம் மீதான ஒரு கிரிமினல் வழக்கில் 2 வருடங்கள் தண்டனை அடைந்து தனது எம்பி பதவியை ராகுல் இழந்தார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில்பெரும்பாலான எதிர்க்கட்சிகள்காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்தனர். இதுபோல், பிரதமர் மோடிக்கு எதிராக ஒன்றிணைய எதிர்க்கட்சிகள் அனைவரும் தயாராகவே உள்ளனர். இந்த ஒற்றுமை கூட்டணியாகி தேர்தலில் போட்டியிடுமா என்பது தான் எதிர்க்கட்சி கள் இடையிலான முக்கிய கேள்வியாக நிற்பதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x