Published : 15 Apr 2023 06:18 AM
Last Updated : 15 Apr 2023 06:18 AM
ஹைதராபாத்: சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 132-வது ஜெயந்தி விழா நேற்று நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் தெலங்கானா மாநில தலைநகராக விளங்கும் ஹைதராபாத்தில், ஹுசைன் சாகர் ஏரி அருகே 50 அடி உயர பீடத்தின் மீது 125 அடி உயர அம்பேத்கர் சிலையை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று மாலை திறந்து வைத்தார்.
இவ்விழாவில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கலந்துகொண்டார். மேலும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ.க்கள் மற்றும் திரளான மக்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் சந்திர சேகர ராவ் பேசியதாவது: நம் அரசியல் சாசனத்தை அம்பேத்கர் எழுதி சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்றும் கூட எஸ்.சி. பிரிவினர் முழுமையாக முன்னேறவில்லை. அம்பேத்கர் ஒரு தலைசிறந்த சட்ட மாமேதை. அவரின் விஸ்வரூப சிலையை நிறுவ ஆசைப்பட்டேன். விரைவில் திறப்பு விழா காணப்போகும் தெலங்கானா தலைமை செயலகத்திற்கும் அம்பேத்கர் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.
இனி ஒவ்வொரு ஆண்டும் உத்தம சேவை புரிந்தவர்களுக்கு அரசு தரப்பில் அம்பேத்கர் ஜெயந்தியன்று விருது வழங்கி கவுரவிக்கப்படும். 2024ல் நடைபெற உள்ள தேர்தலில் நாம் தான் மீண்டும் ஆட்சி அமைப்போம். கட்சிகளோ, தனி நபரோ வெற்றி பெறும் அரசியல் இருக்க கூடாது. மக்கள் வெற்றி பெறும் அரசியல் தான் நாட்டுக்கு தேவை. இவ்வாறு சந்திரசேகர ராவ் பேசினார்.
ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைதான் நாட்டிலேயே மிக உயரமானது. ரூ.146.50 கோடி செலவில் தெலங்கானா அரசு அமைத்துள்ள இச்சிலையின் பாகங்கள் டெல்லியில் தயாரிக்கப்பட்டு, ஹைதராபாத் கொண்டு வரப்பட்டு நிபுணர்களின் ஆலோசனையுடன் நிறுவப்பட்டுள்ளது.
இச்சிலையை ராம் வி. சுதார் எனும் கலைஞர் வடிவமைத்துள்ளார். 30 புத்த பிட்சுக்களின் சிறப்பு பிரார்த்தனையுடன் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நேற்று காலை வெகு கோலாகலமாக நடத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT