Published : 14 Apr 2023 03:21 PM
Last Updated : 14 Apr 2023 03:21 PM
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து அம்மாநில முன்னாள் துணைமுதல்வர் லக்ஷ்மன் சவதி, காங்கிரஸில் இணைந்துள்ளார்.
பாஜக முன்னாள் தலைவரான லக்ஷ்மன் சவதி, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரை சித்தராமையாவின் வீட்டில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார், "எங்களுக்குள் எந்த நிபந்தனையும் கிடையாது. தான் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் உணர்கிறார். இவரைப் போன்ற சிறந்த தலைவர்களை காங்கிரஸில் இணைத்துக்கொள்வது எங்களின் கடமை. இன்னும் 9-10 ஆளுங்கட்சி எம்எல்ஏ-கள் காங்கிரஸில் இணைய விரும்புகிறார்கள். ஆனால் அவர்களை எல்லாம் இணைத்துக்கொள்ளும் அளவிற்கு எங்களிடம் இடமில்லை" என்றார்.
அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற இருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து கடந்த புதன்கிழமை வெளியேறிய லக்ஷ்மன் சவதி, தனது எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நான் என்னுடைய முடிவினை எடுத்துவிட்டேன். மற்றவர்களைப் போல நான் பிச்சைப் பாத்திரத்திம் ஏந்திக்கொண்டு அலையவில்லை. நான் ஒரு சுயமரியாதை மிக்க அரசியல்வாதி. நான் மற்றவர்களின் செல்வாக்கில் இயங்குபவனில்லை" என்று தெரிவித்தார்.
நடைபெற இருக்கிற மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக வெளியிட்டுள்ள இரண்டாவது வேட்பாளர் பட்டியலில், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக தற்போது பதவியில் உள்ள 7 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாஜக வெளியிட்டிருந்த முதல் பட்டியலில், மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் உட்பட 52 புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
லக்ஷ்மனைத் தவிர, சுல்லியா தொகுதியிலிருந்து ஆறுமுறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.அங்கரா, எம்எல்சி சங்கர், முடிகரே எம்எல்ஏ குமாரசாமி, எம்எல்ஏ கூலிஹட்டி சேகர் உள்ளிட்ட சில தலைவர்களும் தேர்லில் போட்டியிட வாய்ப்பு மறுக்கக்கப்பட்ட காரணத்தால் பாஜகவில் இருந்து வெளியேறியுள்ளனர். கர்நாடகாவின் லிங்காயத்துகள் சமூகத்தினரிடம், முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவிற்கு பின்னர், மிகவும் செல்வாக்கு பெற்ற தலைவர் லக்ஷ்மன் சவதி என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT