Last Updated : 12 Apr, 2023 03:33 PM

4  

Published : 12 Apr 2023 03:33 PM
Last Updated : 12 Apr 2023 03:33 PM

பாஜக மேலிடத்தின் மீது அதிருப்தி: தேர்தல் அரசியலில் இருந்து ஈஸ்வரப்பா திடீர் விலகல்

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா

பெங்களூரு: கர்நாடக தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இதனால் பாஜக மேலிடத் தலைவர்களும் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் வருகிற மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''பாஜக‌ மாநில தலைவராக, அமைச்சராக, துணை முதல்வராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது உடல்நிலையின் காரணமாக தேர்தல் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகுகிறேன். எனவே எனது பெயரை எந்த தொகுதிக்கும் பரிசீலிக்க வேண்டாம்'' எனக் கோரியுள்ளார்.

இதுகுறித்து ஈஸ்வரப்பா கூறுகையில், ''இது எனது தனிப்பட்ட முடிவு. இதுவரை கர்நாடகாவில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவில்லை. வருகிற தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பாடுபடுவேன்'' என்றார்.

விரக்தியில் எடுக்கப்பட்ட முடிவா? - கர்நாடக பாஜகவில் செல்வாக்கு மிகுந்தவரான ஈஸ்வரப்பா துணை முதல்வர், 4 முறை அமைச்சர் பதவி வகித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை துணிச்சலாக‌ப் பேசி ஆர்எஸ்எஸ் மேலிடத் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றிருந்தார். கடந்த ஆண்டு 40 சதவீத கமிஷன் பெற்றதாகக் கூறி ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டதால் ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியை இழந்தார்.

அதனால் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். தேர்தலிலும் பாஜக ஆட்சி மன்ற குழுவிலும் எடியூரப்பாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் ஈஸ்வரப்பா அதிருப்தி அடைந்தார். இந்நிலையில் ஷிமோகா தொகுதியில் போட்டியிட சீட் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை பாஜக மேலிடம் ஏற்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தொகுதியில் ஈஸ்வரப்பாவுக்கும், அவரது மகன் சந்தோஷூக்கும் சீட் வழங்க முடியாது என பாஜக மேலிடம் கூறியதாக தெரிகிறது. இதனாலே ஈஸ்வரப்பா இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x