Published : 12 Apr 2023 03:13 PM
Last Updated : 12 Apr 2023 03:13 PM
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் துறை தரப்பில் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய ராணுவத்தின் தெற்கு கமாண்ட் கூறியதாவது: “ராணுவ தளவாடங்கள் பிரிவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். இது துரதிர்ஷ்டமான சம்பவம். 4 பேர் பலியானதைத் தாண்டி வேறு ஏதும் சம்பவம் நடைபெறவில்லை. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னால் INSAS ரைஃபிள் மற்றும் 28 தோட்டாக்கள் தொலைந்துபோன நிலையில் அதற்கும் இன்றைய சம்பவத்திற்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் தீவிரம் அறிந்து இது குறித்து எவ்வித வதந்திகளையும் யாரும் பரப்ப வேண்டாம், ஊடகங்கள் ஊகங்களின் அடிப்படையில் எந்தச் செய்தியும் பரப்பிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டிண்டா ராணுவ முகாமில் நடந்தது என்ன? - முன்னதாக, பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனை உறுதி செய்து ராணுவத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு தாக்குதல் நடைபெற்றது. உடனடியாக பட்டிண்டா ராணுவ முகாமின் அதிரடி தாக்குதல் குழுக்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டன. இதில் 4 பேர் உயிரிழந்தனர். ராணுவ முகாம் முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ராணுவ முகாமின் அனைத்து வாயிற்கதவுகளும் மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. சோதனைக்குப் பின்னரே மேலதிக விவரங்களை தெரிவிக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தீவிரவாத தாக்குதல் இல்லை: இதற்கிடையில், ராணுவ முகாமில் நடந்தது தீவிரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது. பட்டிண்டா மூத்த காவல் கண்காணிப்பாளர் குரானா கூறுகையில், "பஞ்சாப் காவல் துறை பட்டிண்டா ராணுவ முகாமுக்கு வெளியில் தயார் நிலையில் நிற்கிறது. ஆனால், ராணுவத் தரப்பில் உள்ளே நுழைய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை" என்று கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT