Published : 12 Apr 2023 12:59 PM
Last Updated : 12 Apr 2023 12:59 PM
புதுடெல்லி: இந்தியாவிடம் கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கேட்டு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் இன்று (ஏப்.12) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்," உக்ரைன் இந்தியாவிடம் கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் வாயிலாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
3 நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் உக்ரைன் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எமின் தபரோவா இந்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மீனாட்சி லேகியை சந்தித்தார். அப்போது மீனாட்சியிடம் அந்தக் கடிதம் வழங்கப்பட்டது. மேலும், இந்தச் சந்திப்பின்போது, உக்ரைனின் உள்கட்டமைப்பை மறுஉருவாக்கம் செய்வது இந்திய நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று எமின் தபேரோவா கூறினார்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய இணை வெளியுறவுத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கடந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதினை இந்திய பிரதமர் மோடி சந்தித்த போது,"இது போருக்கான நேரமில்லை" என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டியதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் மீனாட்சி தனது பதிவில்,"உக்ரைனின் முதல் துணை வெளியுறவு அமைச்சரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. ஒத்தக் கருத்துடைய இரண்டு நாடுகளும் இருதரப்பு பார்வைகளையும், உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டது. இந்த சந்திப்பின்போது, இருதரப்பு கலாச்சார உறவுகள், பெண்களுக்கான அதிகாரம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. உக்ரைனுக்கு கூடுதல் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சியை சந்தித்தப் பின் உக்ரைன் துணை வெளியுறவுத்துறை அவருக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,"மீனாட்சி லேகியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைனின் முயற்சிகள் குறித்து அமைச்சர் விளக்கினார். கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடங்கிய பிறகு இந்தியா வரும் முதல் உக்ரைன் அமைச்சர் எமின் தபரோவா. இந்த போருக்கு எதிரான பிரதமர் நரேந்திர மோடியின் குரல் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், எமின் தபரோவாவின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக 4 நாள் பயணமாக ஏப்.11ம் தேதி எமின் தபரோவா இந்தியா வந்தடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT