Published : 12 Apr 2023 10:04 AM
Last Updated : 12 Apr 2023 10:04 AM
புதுடெல்லி: நாட்டில் அன்றாட கோவிட் தொற்று எண்ணிக்கை 7000ஐ கடந்துள்ளது. இது கடந்த 7 மாதங்களுக்குப் பின்னர் புதிய உச்சம். இதனால் கோவிட் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,830 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் கோவிட் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,47,76,002 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் கோவிட் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 40,215. ஆக அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்றாட தொற்று 5676 என்றளவில் இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தொற்று 7000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4,692 ஆக இருக்கிறது. நேற்று ஒரே நாளில் கோவிட் தொற்றால் 16 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,31,016 ஆக அதிர்கரித்துள்ளது. டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசத்தில் தலா இருவர், குஜராத், ஹரியாணா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசத்தில் தலா ஒருவர், கேரளாவில் ஐந்து பேர் என மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 401 பேருக்கு பாதிப்பு: தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், நேற்று ஒரேநாளில் 401 பேர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 215 பேர், பெண்கள் 186 பேர். அதிகபட்சமாக சென்னையில் 110 பேரும், செங்கல்பட்டில் 46 பேரும், கோவையில் 41 பேரும், சேலத்தில் 23 பேரும், கன்னியாகுமரியில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 301 ஆக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT