Published : 12 Apr 2023 05:09 AM
Last Updated : 12 Apr 2023 05:09 AM
வயநாடு: எம்.பி. பதவி தகுதி இழப்புக்கு பின்னர் முதல்முறையாக கேரள மாநிலம் வயநாட்டுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், ‘‘என்னை சிறையில் அடைத்தாலும், மக்களுக்காக உழைப்பேன்’’ என்று ஆவேசத்துடன் கூறினார்.
கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி,‘மோடி’ என்ற பெயரை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, அவரது எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்ட பிறகு, முதல்முறையாக நேற்று அவர் கேரள மாநிலம் வயநாட்டுக்கு வந்தார். இது அவர் வெற்றி பெற்ற மக்களவை தொகுதி என்பதால் மாநிலம் முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர்.
முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா, ராகுல் காந்தியை வயநாட்டில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் தொண்டர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியில் ராகுல் கலந்துகொண்டார். வழிநெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் உற்சாக வெள்ளத்தில் மிதந்த ராகுல் காந்தி திறந்த ஜீப்பில் தொண்டர்களை நோக்கி கையசைத்தபடியே வந்தார். நிகழ்ச்சியில் ராகுல் காந்தியுடன், அவரது சகோதரியும், கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியும் பங்கேற்றார்.
பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: வயநாடு மக்களும், இந்தியாவில் வசிக்கும் மக்களும் சுதந்திரமான நாட்டில் வாழ்வதற்கு விரும்புகின்றனர். எனக்கு எதிராக எது நடந்தாலும், நான் நானாகவே இருப்பேன். பாஜகவுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டேன். ஒருபோதும் மாறமாட்டேன். தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்.
வயநாடு தொகுதியின் எம்.பி.யாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த மக்களுக்காக பணியாற்றுவேன். அவர்களின் குறைகளை தீர்க்க உதவுவேன். எம்.பி. எனும் பதவியை பாஜக பறித்தாலும், என்னை சிறையில் அடைத்தாலும் வயநாடு மக்களுக்காக உழைப்பேன். பதவி, வீட்டை பறித்தாலும், பாஜகவை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன். என் வீட்டை எடுத்துக்கொண்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். அந்த வீட்டில் எனக்கு திருப்தி இல்லை. நாட்டில் எத்தனையோ பேர் வீடு இல்லாமல் இருக்கின்றனர். அவர்களில் நானும் ஒருவன். வயநாடு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக என்னை நினைக்கின்றனர். வயநாட்டில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டியது அவசியம். வயநாடு மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன். இதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
பிரியங்கா பேசும்போது, “பாஜக நமது ஜனநாயகத்தை தலைகீழாக மாற்றுகிறது. வேலைவாய்ப்புக்காக மக்கள் போராடும் நிலைதான் நாட்டில் உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT