Published : 12 Apr 2023 06:41 AM
Last Updated : 12 Apr 2023 06:41 AM
புதுடெல்லி: டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து தேசியப் பஞ்சாயத்து என்ற பெயரில் கூட்டம் நடைபெற்றது. இதை ஜெய் பகவான் கோயல் தலைமையிலான இந்து ஐக்கிய முன்னணி அமைப்பு நடத்தியது. இதில் இந்துத்துவா தலைவர்கள் பலருடன் டெல்லி பாஜகவினர் சிலரும் பங்கேற்றனர்.
பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சத்யநாரயண் ஜட்டியா, வடக்கு டெல்லி முன்னாள் மேயர் அவ்தார்சிங் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தை முழுமையாக இந்துக்கள் கொண்டதாக மாற்ற வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அம்மாவட்டத்தில் குடியிருப்புகள் உள்ளிட்ட சொத்துகள் வைத்துள்ள இந்துக்கள் அவற்றை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்யக் கூடாது, வீடுகள் மற்றும் கடைகளை இந்து அல்லாதவர்களுக்கு வாடகைக்கு விடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்த வகையில், வடகிழக்கு மாவட்டத்தை இந்துக்களுக்கான நாட்டின் முதல் மாவட்டமாக மாற்ற இருப்பதாக அதன் தலைவர் கோயல் அறிவித்தார்.
அக்கூட்டத்தில் கோயல் பேசுகையில், “இம்மாவட்டத்தின் ஒருபகுதியை ‘மினி பாகிஸ்தான்’ ஆக மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. இதை முறியடித்து நாட்டின் முதல் இந்துக்களுக்கான மாவட்டமாக இதை நாம் மாற்றுவோம். பிறகு மெல்ல, இந்தியா முழுவதையும் இந்து நாடாக மாற்றுவோம்”என தெரிவித்துள்ளார்.
இதனால் அந்த பஞ்சாயத்து மீதான சர்ச்சைகள் மறுநாள் வெளியில் பரவி டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக அந்த பஞ்சாயத்திற்கு முன் அனுமதி பெறவில்லை என டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் கூட்டத்தை நடத்திய ஜெய் பகவான் கோயல் பெயரும் கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர் உள்ளிட்டோரின் பெயர்களும் பதிவாகி உள்ளது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இச்சூழலில், கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜகவினர் எவரும் கட்சியிடம் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக கலந்துகொண்டதாக அக்கட்சி கூறியுள்ளது. இதுபோன்ற மதசார்புடைய கூட்டங்களை தங்கள் கட்சி அங்கீகரிப்பதும் இல்லைஎன டெல்லி பாஜக தலைமை தெரிவித்துள்ளது. இதேபோன்ற ஒரு இந்து தேசியப் பஞ்சாயத்து கடந்த 2020 பிப்ரவரியில் நடைபெற்று, டெல்லியில் கலவரம் மூண்டதாகப் புகார் உள்ளது. அப்போது அப்பகுதி முஸ்லிம்கள், சிஏஏ மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். கலவரம் வடகிழக்கு மாவட்டம் முழுவதிலும் பரவியதில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 700 பேர் காயம் அடைந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT