Published : 11 Apr 2023 04:21 PM
Last Updated : 11 Apr 2023 04:21 PM

“இந்தியா நம்பர் 1 ஆக ஆம் ஆத்மி கட்சியில் சேருங்கள்” - நாட்டு மக்களுக்கு கேஜ்ரிவால் அழைப்பு

புதுடெல்லி: “இந்தியா நம்பர் 1 ஆவதற்கு ஆம் ஆத்மி கட்சியில் மக்கள் சேர வேண்டும்” என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சிக்கான அந்தஸ்து நேற்று கிடைத்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு வந்த கேஜ்ரிவால், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ''ஆம் ஆத்மி கட்சி இப்போது தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதை அடுத்து, நமக்கான பொறுப்பு அதிகரித்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி மீது நம்பிக்கை வைத்த, ஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா நம்பர் ஒன் ஆவதற்கு நாட்டு மக்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 9871010101 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுப்பதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியில் சேர முடியும்.

நேர்மை, உறுதியான நாட்டுப்பற்று, மனிதநேயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதுதான் ஆம் ஆத்மி கட்சியின் சித்தாந்தம். போக்கிரித்தனம் எங்கள் சித்தாந்தம் அல்ல. நேர்மையான முறையில் தேர்தலில் போட்டியிட முடியும்; வெற்றி பெற முடியும் என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். நேர்மையான முறையில் ஓர் அரசை நிர்வகிக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். இந்தியாவை நம்பர் ஒன் நாடாக ஆக்குவதே எங்கள் கனவு. உலகின் நம்பர் ஒன் நாடாக இந்தியாவை நாங்கள் மாற்ற வேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருக்கலாம்.

நாட்டில் முதல் முறையாக நேர்மறை அரசியலை நாங்கள் வழங்கி இருக்கிறோம். நாங்கள் முதல்முறையாக போட்டியிட்ட இடங்களில்கூட கல்விக்கான, மருத்துவத்துக்கான அரசியலை உருவாக்கி இருக்கிறோம். தற்போது அனைத்து தேச விரோத சக்திகளும் ஒன்றிணைந்து ஆம் ஆத்மி கட்சியை எதிர்க்கின்றன. கனவுகளை காண்பதற்கான கல்வியை கொடுத்ததுதான் மணிஷ் சிசோடியா செய்த குற்றம். இந்தக் குற்றத்திற்காகவே அவரை தேச விரோத சக்திகள் சிறையில் அடைத்துள்ளன.

ஆம் ஆத்மியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்து தேச விரோத சக்திகளும் எண்ணுகின்றன. ஆனால், கடவுள் நம்மோடு இருக்கிறார். ஒரு சிந்தனைக்கான நேரம் வந்துவிட்டால், அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது'' என்று அரவிந்த் கேஜ்ரிவால் உரையாற்றினார்.

தேசிய கட்சியாக ஆம் ஆத்மி... - தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற தலைமை தேர்தல் ஆணையம் சில விதிகளை நிர்ணயித்துள்ளது. 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 3 மாநிலங்களில் 2 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 4 மாநிலங்களில் பிராந்திய கட்சி அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும். இந்த 3 விதிகளில் குறைந்தபட்சம் ஒரு விதியை பூர்த்தி செய்யும் கட்சிக்கு தேசிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

டெல்லி, பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி 6 சதவீதத்துக்கும் அதிக வாக்குகளை பெற்றிருந்தது. கடந்த டிசம்பரில் நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி 13 சதவீத வாக்குகள் பெற்றது. இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சிக்கான அங்கீகாரம் வழங்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா அமர்வு, ஆம் ஆத்மி விவகாரத்தில் ஏப்.13-ம் தேதிக்குள் தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உத்தரவிட்டது. இந்தச் சூழலில் ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கி தலைமை தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

அதேநேரம், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்துள்ளன. புதுச்சேரியில் பாமகவுக்கு பிராந்திய கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அங்கீகாரம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய பட்டியலின்படி தற்போது பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி தேசிய கட்சிகளாக உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x