Published : 11 Apr 2023 03:34 PM
Last Updated : 11 Apr 2023 03:34 PM
புதுடெல்லி: புதிதாக அரசு பணிகளில் சேர உள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி வழங்க உள்ளார்.
படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் மத்திய அரசு ரோசர் மேளா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசு பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தமாக பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்குவதற்கான நிகழ்ச்சி வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி ஆன்லைன் முறையில் அனைவருக்கும் பணி ஆணை வழங்க உள்ளார்.
ரயில் மேலாளர், நிலைய மேலாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர், காவலர், இளநிலை கணக்கர், வருமான வரித்துறை ஆய்வாளர், வரி உதவியாளர், உதவி பேராசிரியர், ஆசிரியர், நூலகர், செவிலியர், நேரடி உதவியாளர் என அரசின் பல்வேறு பணிகளுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 13-ம் தேதி பணி நியமன ஆணையை பெறும் இவர்கள் மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்ற உள்ளார்.
இதையடுத்து, இவர்களுக்கு ஆன்லைன் முறையில் பயிற்சி அளிக்கப்படும். இதில், இவர்கள் தங்களின் துறையில் எவ்வாறு பணியாற்ற வேண்டும், எத்தகைய தவறுகளில் ஈடுபடக் கூடாது என்பன உள்ளிட்டவை குறித்து அறிவுரையும் பயிற்சியும் வழங்கப்படும். இதையடுத்து, இவர்கள் தங்களுக்கான துறையில் தங்களுக்கான வழக்கமான பணியில் ஈடுபடத் தொடங்குவர்.
ரோசர் மேளா திட்டத்தின் கீழ் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகள் வழங்கவும், அவர்களின் நிலை மேம்படவும், நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களின் பங்களிப்பு தொடரவும் இந்த திட்டம் முக்கிய பங்களிப்பை அளிக்கும் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT