Published : 11 Apr 2023 12:00 PM
Last Updated : 11 Apr 2023 12:00 PM

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடையில்லை - தமிழக அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

கோப்புப்படம்

புதுடெல்லி: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்த அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (ஏப்.11) தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவினை பிறப்பித்தது. முன்னதாக, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், ''ஆர்எஸ்எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்த போலீஸார் அனுமதி அளிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஒழுக்கத்தை கடைபிடித்து அமைதியான முறையில், மற்றவர்களுக்கு எந்தவொரு ஊறும் விளைவிக்காதவாறு பேரணியை நடத்த வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும்'' என்று உத்தரவிட்டிருந்தது.

மேலும், இந்த ஊர்வலத்திற்கு மூன்று தேதிகளை தேர்வு செய்து காவல் துறையிடம் விண்ணப்பிக்க ஆர்எஸ்எஸ். அமைப்பிற்கும், அவற்றில் ஒரு தேதியை தேர்வு செய்து அனுமதி அளிக்க காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x