Published : 11 Apr 2023 07:06 AM
Last Updated : 11 Apr 2023 07:06 AM
புதுடெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,880 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு நேற்று கூறும்போது, “கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. போதிய அளவில் பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. புதிய வகை கரோனா வைரஸ் உருவாகி இருக்கிறது. இந்த 3 காரணங்களால் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டபடி நாடு முழுவதும் நேற்று அரசு, தனியார் மருத்துவமனைகளில் அவசர கால ஒத்திகை நடத்தப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் உள்ள ஆர்எம்எல், எய்ம்ஸ் மருத்துவமனைகளில் அவசர கால ஒத்திகையை ஆய்வு செய்தார்.
இதன்பிறகு அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறும்போது, ‘‘கடைசியாக கரோனா ஒமிக்ரானின் பி.எப்.7 வகை வைரஸ் பரவியது. தற்போது எக்ஸ்பிபி 1.16 என்ற வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. பொதுமக்கள் கரோனா தடுப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றினால் வைரஸ் பரவலை தடுக்க முடியும்’’ என்றார்.
4-வது அலை ஏற்படுமா?
உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா கூறும்போது, “இந்தியாவில் பரவும் எக்ஸ்பிபி 1.16 வைரஸை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இதன் காரணமாக இந்தியாவில் 4-வது அலை ஏற்பட வாய்ப்பிருக்கிறதா, இல்லையா, உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவுமா என்பதை இப்போதைக்கு கணக்கிட முடியாது’’ என்றார்.
இந்திய சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறும்போது, ‘‘தற்போது பரவும் கரோனா வைரஸால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. உயிரிழப்பும் மிக குறைவாக இருக்கிறது. இரு தவணை தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டிருப்பதால் 4-வது அலை ஏற்பட வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம். எனினும் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்’’ என்றனர்.
ரூ.225 விலையில் விரைவில் கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி
சீரம் இன்ஸ்டிடியூட்டின் தயாரிப்பான கோவோவாக்ஸ் கரோனா தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த கோவின் வலைதளத்தில் விரைவில் சேர்க்கப்பட உள்ளது.
கோவோவாக்ஸ் ஒரு டோஸின் விலை ரூ.225 ஆக (ஜிஎஸ்டி தனி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவின் வலைதளம் மூலமாக இதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். கோவோவாக்ஸ் ஒரு உலகத் தரம்வாய்ந்த தடுப்பூசி. இதற்கு டிஜிசிஐ, டபிள்யூஹெச்ஓ, யுஎஸ்எப்டிஏ ஆகிய அமைப்புகள் அங்கீகாரம் அளித்துள்ளன.
எனவே, கரோனா அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் பெரிய வர்களுக்கு பூஸ்டர் டோஸாக இந்த தடுப்பூசியை கோவின் வலைதளத்தில் சேர்க்க வேண்டும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) இயக்குநர் பிரகாஷ் குமார் சிங், மத்திய சுகாதார துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார்.
இதனை ஏற்று சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த முடிவினை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT