Published : 11 Apr 2023 06:27 AM
Last Updated : 11 Apr 2023 06:27 AM

நம் நிலத்தில் ஓர் அங்குலம் கூட யாரும் எடுக்க முடியாது - மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

அமித் ஷா

குவாஹாட்டி: திபெத்தை ஆக்கிரமித்த சீனா, நமது நாட்டின் அருணாச்சல பிரதேசத்துக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறிவரும் சீனா, அதற்கு ஜாங்னான் என பெயரிட்டு அழைக்கிறது.

அண்மையில் அருணாச்சலின் 11 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. “அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி. புதிய பெயர்களை சூட்டுவதால் உண்மையை மாற்றிவிட முடியாது” என்று தெரிவித்தது.

இந்நிலையில் இந்தியாவின் தொலைதூர கிழக்கு எல்லையாக அருணாச்சலில் அமைந்துள்ள கிபித்தூ கிராமத்தில் துடிப்பான கிராமங்கள் திட்டத்தை (விவிபி) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் அருணாச்சல பிரதேசத்தில் 455 எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. அருணாச்சல பிரதேசம் மட்டுமின்றி இமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட், லடாக் பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக வரும் 2026 வரை மத்திய அரசு ரூ.4,800 கோடி செலவிட உள்ளது.

முன்னதாக அமைச்சர் அமித் ஷாவின் அருணாச்சல் பயணத்துக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்தது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ஜாங்னான் சீனாவின் பிரதேசம் ஆகும். இந்திய அதிகாரியின் பயணம் சீன இறையாண்மையை மீறுவதாக உள்ளது. எல்லையில் அமைதியான சூழலுக்கு இது உகந்ததாக இல்லை” என்றார்.

இந்நிலையில் துடிப்பான கிராமங்கள் திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: 2014-ம் ஆண்டுக்கு முன் வடகிழக்கு பகுதி முழுவதும் குழப்பமான பகுதியாக அறியப்பட்டது, ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் கிழக்கு நோக்கிய கொள்கை காரணமாக, வடகிழக்கு இப்போது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் பகுதியாக கருதப்படுகிறது.

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வீரர்களும் ராணுவமும் நமது எல்லையில் இரவும் பகலும் பணியாற்றி வருவதால் இன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நிம்மதியாக உறங்க முடிகிறது. இன்று நம் மீது தீய பார்வையை செலுத்த யாருக்கும் சக்தி இல்லை என்று பெருமையுடன் சொல்லலாம்.

இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை யாரும் கேள்வி கேட்க முடியாது. நமது நிலத்தில் ஓர் அங்குலம் கூட யாரும் எடுத்துவிட முடியாது. இவ்வாறு அமைச்சர் அமித் ஷா பேசினார். சீனாவின் ஆட்சேபத்துக்கு இது பதிலடியாக கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x