காலிஸ்தான் போராட்டத்தால் இங்கிலாந்துடன் தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தமா? - மத்திய அரசு மறுப்பு

இந்தியப் பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் | கோப்புப் படம்
இந்தியப் பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: லண்டனில் நடைபெற்ற காலிஸ்தான் ஆதரவு போராட்டம் காரணமாக இங்கிலாந்துடனான தடையற்ற வர்த்தகத்துக்கான பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திவைத்திருப்பதாக வெளியான செய்தியை மத்திய அரசு மறுத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டு தீபாளிக்குள் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியது, அவருக்கு அடுத்து பிரதமராக தேர்வான லிஸ் ட்ரஸ் பதவி விலகியது ஆகிய காரணங்களால் குறித்த காலக்கெடுவுக்குள் ஒப்பந்தம் எட்டப்படவில்லை.

லிஸ் ட்ரஸ்-க்குப் பிறகு இங்கிலாந்து பிரதமராக தேர்வான ரிஷி சுனக், ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது, இந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தின்போது இந்திய தூதரகம் தாக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த இந்திய தேசியக் கொடி கீழே இறக்கப்பட்டது. இந்திய தூதரகத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படாததே இதற்குக் காரணம் என்பதால், இது குறித்து விளக்கம் அளிக்க இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தின் மூத்த அதிகாரிக்கு இந்திய வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியது. மேலும், இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

இந்தக் கசப்பான சம்பவம் காரணமாக, இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திவைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்தச் செய்தி அடிப்படையற்றது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இரு நாட்டு வர்த்தக அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் கெமி பெடினோச் இடையே நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், "பரஸ்பர உணர்வு மற்றும் மரியாதை" அடிப்படையில் பேச்சுவார்த்தையை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து இரு தரப்புக்கும் இடையே கடந்த பிப்ரவரி 10-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை மார்ச் மாதம் நடத்துவதாக இருந்தது. எனினும், அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in