Published : 10 Apr 2023 02:50 PM
Last Updated : 10 Apr 2023 02:50 PM

கியான்வாபி வழக்கு: ரம்ஜான் தொழுகை தொடர்பான மனுவை ஏப்.14-ல் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

கோப்புப்படம்

புதுடெல்லி: வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் ரம்ஜான் மாதத்தில் வாஸு (சமயச் சடங்கு) செய்ய அனுமதி கோரி அஞ்சுமன் இன்தாஜாமியா கமிட்டியினர் தாக்கல் செய்த மனுவை இம்மாதம் 14-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்படும் இடத்தின் பாதுகாப்பை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து கடந்த நவம்வர் 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, மசூதி கமிட்டி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹுசீஃபா அஹ்மதி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ரம்ஜான் மாதம் நடந்து கொண்டிப்பதாகவும், ரம்ஜானுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருப்பதால் கியான்வாபி வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், தற்போது ஒசுகானவிலிருந்து ட்ரமில் நீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், ரம்ஜான் மாதம் காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வழக்கை இம்மாதம் 14-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மார்ச் 28-ம் தேதி, கியான்வாபி மசூதி வளாகம் தொடர்பாக வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கும்படி கோரிய மனுவை ஏப்ரல் 21-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கியான்வாபி தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைக்க கோரிய மனுவின் மீதான முடிவினை ஐந்து முறை வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தாக, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயினின் குறிப்புகளை தலைமை நீதிபதி கருத்தில் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக, கியான்வாபி - சிங்கார கவுரி அம்மன் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்க வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இந்து தரப்பினருக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. மேலும், சர்வே எடுக்க ஆணையரை நியமிப்பது தொடர்பான அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள் தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் 17-ம் தேதி, உச்ச நீதிமன்றம் ஓர் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில், வாரணாசி சிவில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடந்த வீடியோ சர்வேயின்போது, கியான்வாபி - சிங்கார கவுரி கோயில் வளாகத்தில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்படும் இடத்தின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் படி வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், மசூதி வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும் அனுமதி அளித்திருந்தது. வழக்கை மே 20-ம் தேதி மாவட்ட நீதிபதிக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம், வழக்கின் சிக்கல் மற்றும் முக்கியத்துவம் கருதி மூத்த நீதிபதியைக் கொண்டு வழக்கைக் கையாள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x