Published : 09 Apr 2023 04:36 AM
Last Updated : 09 Apr 2023 04:36 AM

நாளை இந்தியா வருகிறார் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்

எமின் தபரோவா

புதுடெல்லி: உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா, 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு நாளை (ஏப்ரல் 10) வருகை தரவுள்ளார்.

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் ஓராண்டை கடந்த நிலையிலும் அங்கு சண்டை நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு வரும் உக்ரைன் அமைச்சரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவுக்கு வரும் எமின் தபரோவா, இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகியையும், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உக்ரைன் அமைச்சரின் இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை உக்ரைனுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுக்கவுள்ளார். மேலும், ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் உக்ரைன் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தவறான நடவடிக்கைகள் குறித்தும் இந்திய ஊடகங்கள் மற்றும் சிந்தனையாளர்களிடம் எபின் தபரோவா எடுத்துரைப்பார்.

மேலும் உக்ரைனுக்கு இந்தியா மனிதாபிமான உதவி வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைக்கவுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பயணத்தின்போது, இந்தியாவில் உக்ரைனுக்கான ஆதரவை அவர் திரட்ட முயல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உக்ரைனுக்கு இந்தியாவின் உதவியை அவர் கோருவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, போர் காரணமாக சேதமடைந்துள்ள மின்உற்பத்திக்கான உள்கட்டமைப்புகளை சரிசெய்ய வேண்டும் என்றும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று எமின் தபரோவா கோருவார் எனத் தெரிகிறது. மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியை இந்தியா வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைப்பார் எனத் தெரிகிறது.

இந்த பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக, ஜி20 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்க இந்தியா அழைப்பு விடுக்க வேண்டும் என எமின் தபரோவா வேண்டுகோள் விடுப்பார் எனத் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x