Published : 09 Apr 2023 04:48 AM
Last Updated : 09 Apr 2023 04:48 AM
புதுடெல்லி: அடுத்த 5 நாட்களில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தனது அறிக்கையில், “வடமேற்கு மற்றும் தீபகற்ப பகுதிகளை தவிர நாட்டின் பல்வேறு பகுதிகள் ஏப்ரல் முதல் ஜூன் வரை இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலையை அனுபவிக்கும்” என்று கூறியிருந்தது.
இம்மாதங்களில் பிஹார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கணிசமான அளவு வெப்ப அலை வீசக்கூடும் என ஐஎம்டி இயக்குநர் மிருத்யுஞ்சய் மகாபத்ரா கூறியிருந்தார்.
இந்நிலையில் ஐஎம்டி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அடுத்த 5 நாட்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் உயரும்” என்று கூறப்பட்டுள்ளது.மேலும் அடுத்த 2 நாட்களில் மத்திய பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், அதன்பிறகு குறையும் என்றும் ஐஎம்டி கூறியுள்ளது.
1901-ல் பதிவுசெய்தல் தொடங்கியதில் இருந்து இந்தியா இந்த ஆண்டு மிக வெப்பமான பிப்ரவரியை பதிவு செய்துள்ளது என்றும் ஐஎம்டி கூறியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT