Last Updated : 09 Apr, 2023 04:41 AM

4  

Published : 09 Apr 2023 04:41 AM
Last Updated : 09 Apr 2023 04:41 AM

இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சிக்கு பிரதமர் மோடி அயராது பாடுபடுகிறார்: மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி

புதுடெல்லி: ஜி20 மாநாட்டுக்கான 2-வது செயல் பாட்டுக் கூட்டம் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு பிராந்தியங்கள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளி தழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி வருமாறு:

ஜி20 மூலம் முன்னிறுத்தப்படும் சாகச சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு என்ன செய்யவுள்ளது?

ஆன்மிக சுற்றுலாவுக்குப் பிறகு இந்தியாவில் சாகச சுற்றுலாவை மேம்படுத்த நமது பிரதமர் மிகப்பெரிய செயல் திட்டம் வகுத்துள்ளார். நாட்டின் எல்லைப்புறங்களில் சுமார் 700 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் போன்றோர் அங்குள்ள பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசி குறைகளை கேட்பார்கள். இவற்றை சரிசெய்து இளைய தலைமுறைக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில்செயல் திட்டங்களை வகுப்பார்கள். பெண்கள் உள்ளிட்ட மலைவாழ் மக்களும் இதன்மூலம் பலன் பெறுவார்கள். நான் சிக்கிம் மாநிலத்தில் சீன எல்லைக்கு அருகில் உள்ள கிராமத்தில் தங்கிவர உள்ளேன். இந்தவகையில் நாட்டின் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும்.

சாகச சுற்றுலா மீதான புதிய கொள்கையில் என்ன எதிர்பார்க்கலாம்?

ஒரு வருடத்திற்காக ‘கோப்ரா 14 செயல் திட்டங்கள்’ அறிவிக்கப்பட உள்ளன. இதில் மாநிலங்களுடன் இணைந்து சாகச சுற்றுலாப் பகுதிகள் அடையாளம் காணப்படும். தேசிய அளவில் சாகச சுற்றுலா திறன்களை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிலாக அங்கீகரித்து வளர்க்கப்படும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி யில் சாகச சுற்றுலாவின் பங்கு எப்படி இருக்கும்?

வரவுள்ள நாட்களில் சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனம் முதல் தனியார் பெரு நிறுவனங்கள் வரை சாகச சுற்றுலாவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுவர். சாகச சுற்றுலா மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

டெல்லியில் அடுத்த மாதம் ‘சர்வதேச சுற்றுலா தொழில் முதலீட்டு மாநாடு’ நடத்த உள்ளோம். இதில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அதிகம் பங்கேற்கின்றனர். இதில் கேபிள் கார் உள்ளிட்ட சுற்றுலா சாதனங்களை காட்சிப்படுத்தி மாநிலங்களுக்கு அறிமுகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

பாஜக தலைமையிலான மத்திய ஆட்சியில் இந்திய சுற்றுலாத் துறை வளர்ச்சி பெற்று வருவதாகக் கூற முடியுமா?

சுற்றுலாத் துறை என்பது வளர்ச்சி மற்றும் வருவாய்க்கான மிகப்பெரிய சாதனமாகும். இதை மத்திய அரசு தொடர்ந்து அதிகமாகப் பயன்படுத்தி வருகிறது. இது வேலைவாய்ப்புக்கான துறையாகவும் உள்ளது. இதனால் நமது பிரதமர் உள்நாடு, வெளிநாடு என எங்கு சென்றாலும் இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறார். இந்திய சுற்றுலாத் தலங்கள் பற்றி தவறாமல் பேசுகிறார். வெளிநாட்டவரை இந்தியாவுக்கு சுற்றுலா வரும்படி அழைக்கிறார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாய்நாடு வரும்போது அந்தந்த நாட்டினரையும் அழைத்துவரும்படியும் வேண்டுகிறார். ஏனெனில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, சர்வதேச அளவில் விவசாயத்துக்கு பிறகு அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறை சுற்றுலாத் துறை.

சாகச சுற்றுலா வளர்ச்சிக்கு மத்திய அரசின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

சாகச சுற்றுலா பாதுகாப்புக்கான புதிய சட்டம் அமலாக்கப்பட உள்ளது. இத்துறையில் மேலும் இரண்டு செயல்திட்டங்களை மாநில அரசுகள் மற்றும்சாகச சுற்றுலா தனியார் அமைப்புகளுடன் இணைந்து வகுக்க உள்ளோம். பிரான்ஸ் நாடு சமீபத்தில் மாதிரி சாகச சுற்றுலா கிராமம் ஒன்றை தேர்வு செய்துள்ளது. இதுபோல், இந்தியாவிலும் மாதிரி கிராமம் தேர்வு செய்ய உத்தராகண்ட் அரசுடன் பேசி வருகிறோம்.

இந்தியாவின் சாகச சுற்றுலாவில் வடகிழக்கு பிராந்தியம் அதிகம் முன்னிறுத்தப்படுகிறதா?

வடகிழக்கு பிராந்தியம் வருவோர் சுவிட்சர்லாந்து செல்லத் தேவையில்லை. இங்குள்ள சுற்றுலாப் பகுதிகள், பல வருடங்களாக அரசியல் சூழல் காரணமாக வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தன. இப்பகுதியில் தற்போது அமைதி நிலவுகிறது. தனியார் முதலீடுகளுக்கு பாதுகாப்பான சூழலும் அதிகரித்துள்ளது. எனவே, வட கிழக்குப் பகுதிக்கு எனத் தனியாக சாகச சுற்றுலா முதலீட்டு மாநாட்டை வரும் செப்டம்பரில் மத்திய அரசு நடத்தவுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங் களில் சாகச சுற்றுலாப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதா?

தென் மாநிலங்களில் ஆன்மிக சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளன. சாகச சுற்றுலாவுக்கு அவற்றின் கடற்பகுதிகள் அதிகம் பயன்படும். மேலும் இங்குள்ள மலைப்பகுதிகளும் சாகச சுற்றுலாவுக்கான பெரும் வாய்ப்பாக உள்ளன. எனவே, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் சாகச சுற்றுலா களங்கள் பல உள்ளன. அந்தந்த மாநிலஅரசுகள் இவற்றை முன்னிறுத்த மத்தியஅரசு அனைத்து உதவிகளும் செய்யும். சாகச சுற்றுலாவை வளர்க்க மாநில அரசுகளுக்கு முழு ஆதரவு அளித்து ஊக்குவிப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x