Published : 08 Apr 2023 04:01 PM
Last Updated : 08 Apr 2023 04:01 PM
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் மோசமான ஆடை அணியும் பெண்களைப் பார்த்தால் சூர்ப்பணகை போல் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
ஹனுமன் மற்றும் மஹாவீர் ஜெயந்தியை ஒட்டி இந்தூரில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பேசிய அவர், “இளம் பெண்கள் போதை வஸ்துகளைப் பயன்படுத்திக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி இரவில் வெளியில் திரிவதைப் பார்க்கும்போது எனக்கு உடனே காரில் இருந்து இறங்கி அவர்களின் கன்னத்தில் அறைய வேண்டும் என்று தோன்றும்.
நம் நாட்டில் பெண்களைக் கடவுளாகக் கருதுகிறோம். ஆனால் அவர்களோ மிகவும் மோசமான ஆடையணிந்து சூர்ப்பணகை போல் காட்சியளிக்கிறார்கள். கடவுள் உங்களுக்கு ஒரு நல்ல உடலைக் கொடுத்துள்ளார். அதற்கு அழகான ஆடை அணிவியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நல்லவற்றை சொல்லிக் கொடுங்கள். எனக்குக் கவலையாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
விஜயவார்கியாவின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் பிரமுகர் ஷமா முகமது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்தக் கருத்துக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சங்கீதா ஷர்மா கூறுகையில், “பாஜக தலைவர்கள் மீண்டும் மீண்டும் பெண்களை அவமதித்துக் கொண்டே இருக்கின்றனர். பெண்களை அவர்களின் ஆடைகள் அடிப்படையில் சூர்ப்பணகை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. பாஜக மன்னிக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT