Published : 08 Apr 2023 10:27 AM
Last Updated : 08 Apr 2023 10:27 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி புதிதாக 6,155 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6.155 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தம் 31,194 பேர் கோவிட் சிகிச்சையில் உள்ளனர். இதனால் இதுவரை நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,47,51,259 ஆக அதிகரித்துள்ளது.
கோவிட் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இதுவரை கோவிட் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,30,954 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவிலான கரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிபி1.16 திரிபு: XBB.1.16 என்ற ஓமிக்ரான் புதிய திரிபு தான் இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிக்கக் காரணமாக உள்ளது. XBB வைரஸ் என்பது ஒமிக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்ஸ்பிஎப், பிஏ.5.2.3மற்றும் பிஏ.2.75.3 வைரஸ்களின் மறுவடிவம் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸின் மரபணு மாற்றமான XBB 1.16 என்ற வைரஸ்தான் தற்போது நிறைய பேரை பாதிக்கக் காரணமாக இருப்பது மரபணு பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய அரசு அறிவுறுத்தல்: நாடு முழுவதும் கோவிட் தொற்று அதிகரித்து வரும் சூழலில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
இதில் அமைச்சர் மாண்டவியா பேசியபோது, ‘‘8 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லியில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது. கர்நாடகா, இமாச்சல பிரதேசம், தமிழகம், ஹரியாணாவில் 5-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் உள்ளது. எனவே மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை உறுதிசெய்ய அனைத்து மருத்துவமனைகளிலும் ஏப்.10, 11-ல் அவசரகால ஒத்திகை நடத்த வேண்டும். 10 லட்சம் பேருக்கு 100 பரிசோதனைகள் என்ற தற்போதைய விகிதத்தில் இருந்து பரிசோதனை விகிதத்தை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT